பொது செய்தி

இந்தியா

தோடர் மக்களின் வாசமலர் நான்!

Added : மே 17, 2020
Share
Advertisement

நீலகிரியில் வாழும், பழங்குடி மக்களுக்காக போராடும், தோடர் பழங்குடியின பெண் வாசமல்லி: எங்கள் பழங்குடி இன பெண்களில், முதல் பட்டதாரி நான் தான். ஊட்டி நகரின் மிக அருகில் உள்ள, 'தமிழகம் மந்து' என்ற, பழங்குடி கிராமம் தான் சொந்த ஊர்.

ஐந்தாம் வகுப்பு வரை கூட, பெண்கள் படிப்பதே பெரும் குற்றச்செயலாகப் பார்க்கப்பட்ட காலம் அது. படிப்பறிவு துளியும் அற்ற என் பாட்டி, என் பெற்றோருக்கு தெரியாமல், என்னைக் கோவைக்கு அழைத்து வந்து, தனியார் கல்லுாரியில் சேர்த்து படிக்க வைத்தார். டாக்டர் ஆக வேண்டும் என்பது என் கனவு. ஆனால், இரண்டு மதிப்பெண்ணில் தவறி விட்டேன். இளங்கலை அறிவியலில் சேர்ந்தேன்; ஆங்கிலம் பெரும் சவாலாக இருந்தது. மனம் தளராமல் முயற்சி செய்து, படித்து முடித்தேன். அடுத்த வருடமே, திருமணம் முடிந்தது.

பள்ளி பருவத்திலிருந்தே, ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ளும் முன், 'ஏன்?' என்ற கேள்வி என்னுள் முளைக்கத் தொடங்கும். அதன் விளைவாக, வாழ்வில் ஏற்றம் காணாத எங்கள் மக்களைப் பார்க்கும்போது, 'இவர்களின் முன்னேற்றம் ஏன் தடைபடுகிறது' என்ற கேள்வி எழுந்தது. விடுமுறை நாள்களில், பல கிராமங்களுக்கு சென்று, அவர்களின் தேவை என்ன என்பதை அறிய ஆரம்பித்தேன்; உடனடியாக, தீர்க்க முடிந்தவற்றுக்கு ஆலோசனைகளை அளித்தேன். அரசு சார்ந்த தீர்வுகளுக்கு, முயற்சிகளை மேற்கொண்டேன். பழங்குடி மக்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் சில செயல்களைத் தடுக்க, முடிவு செய்தோம்.

உதாரணமாக, ஒருவர் இறந்தால், அவருடன் வளர்ப்பு எருமைகளைப் பலியிடுவது, எங்கள் இன மக்களின் வழக்கமாக இருந்தது. இதனால், தனித்துவம் மிக்க, எங்கள் எருமை இனங்கள் அழியும் நிலை உருவானது. இதைத் தடுக்க நினைத்து, மக்களை அணுகினோம்; ஆரம்பத்தில், மக்கள் எங்களைத் தாக்க வந்தனர்; தொடர்ந்து போராடினோம். இன்றைக்கு இந்த வழக்கமே இல்லாமல் போய்விட்டது. இப்படி, பல மூடப் பழக்க வழக்கங்களை ஒழிக்க, நீண்ட காலம் போராடினோம்; வெற்றியும் கிடைத்தது. வெளிநாடுகளுக்கும் பயணித்து, எங்கள் பழங்குடியின அணுகுமுறை குறித்து, உரையாற்றியுள்ளேன். என் கூடவே பயணித்த என் கணவர், மூளையில் ஏற்பட்ட கட்டியால், கடந்த ஆண்டு இறந்து விட்டார். எனக்கு, 63 வயதாகிறது.

இரண்டு மகன்கள், மருமகள், பேரக்குழந்தைகள், விருதுகள், பாராட்டுகள் என, வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. ஆனாலும், இந்த மக்களுக்கு மீட்டுத்தர வேண்டிய உரிமைகள் நிறைய உள்ளன. அவர்களுக்காகப் போராடி வெற்றி பெற்றதும் ஒரு மன நிறைவு வருமே, அது தான் என் நிம்மதியான சுவாசம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X