தஞ்சாவூர் : மனநலம் பாதிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக தஞ்சையில் தவித்த பெண், கொரோனா ஊரடங்கால், குணமாகி குடும்பத்தினருடன் சேர்ந்தார்.
கொரோனா ஊரடங்கை அடுத்து, தஞ்சாவூர் நகரில், ஆதரவின்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என, 120 பேர், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லுாரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ உதவிகளை, மாநகராட்சியுடன் இணைந்து, 'ரெனிவெல் பவுண்டேஷன்' என்ற அமைப்பினர் செய்து வருகின்றனர். இந்த முகாமில், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண் ஒருவர், நான்கு நாட்களுக்கு முன், தன் பெயர் சித்ரா, 32; திருவாரூர், நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் எனக் கூறியுள்ளார்.
தனக்கு, கணவர், குழந்தைகள் இருப்பதையும் தெரிவித்துள்ளார். சித்ரா கூறிய முகவரிக்கு சென்று விசாரித்துபோது, அவர் கூறியது உண்மை என தெரிந்தது. இதையடுத்து, 14ம் தேதி, சித்ராவை, நீடாமங்கலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.சித்ராவை பார்த்த கணவர் ஜெயகுமார், 45, மகன் கவின், 16, மகள் ரித்திகா, 11, ஆகியோர், அவரை கட்டித் தழுவி வரவேற்றனர்.ரெனிவல் பவுண்டேஷன் நிர்வாகி வீரமணி கூறியதாவது: சித்ரா, சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், வழி தவறி, குடும்பத்தை பிரிந்து, தஞ்சைக்கு வந்து விட்டார். அவரை குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர்.தற்போது, முகாமில் தக்க வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதமாக, எந்த மருந்து, மாத்திரையும் இல்லாமல், அன்பு, அரவணைப்பை கொண்டு, அவர் மனதை தேற்றும் முயற்சியில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தற்போது, நன்கு குணமாகி, குடும்பத்தினருடன் சேர்ந்து விட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE