கோல்கட்டா : கொரோனாவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் மம்தா பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என பா.ஜ., எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ., தேசிய பொது செயலர் கைலாஷ் விஜய்வர்கியா பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா பாதிப்புகளை மேற்கு வங்கத்தில் மம்தா முறையாக கையாளவில்லை. கொரோனாவை பயன்படுத்தி திரிணாமுல் காங்., அரசியல் செய்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதைவிடுத்து, எண்ணிக்கையை மறைத்து வருகிறது. உண்மை வெளியே தெரிந்ததால், அதிகாரிகளை மம்தா மாற்றி வருகிறார்.

மத்திய அரசின் உதவிகளை மம்தா ஏற்க மறுக்கிறார். முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறார். கொரோனாவுக்கு எதிரான போரில் பிரதமர் மோடி வென்று விட்டால், அது பா.ஜ.,வுக்கு சாதகமாகி, சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என அவருக்கு அச்சம்,
கொரோனா பாதிப்பு, வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்தை முறையாக கையாளாத மம்தா கட்சி, சட்டசபை தேர்தலில் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். பிரசாந்த் கிஷோரால் கூட திரிணாமுல் தோல்வியை தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE