கடலுார் : கடலுாரில், டாஸ்மாக் சரக்கு வாங்கும் ஆவலில், போலி, 'டோக்கனை', 200 ரூபாய்க்கு வாங்கிய, 'குடி'மகன்கள் போலீசில் சிக்கினர்.
தமிழகம் முழுதும் நேற்று, டாஸ்மாக் மது கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு, 500 பேருக்கு மட்டுமே விற்பனை செய்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது.இதன்படி, வாரத்தில் ஏழு நாட்களுக்கும், ஏழு வண்ணங்களில் டோக்கன் தயார் செய்யப்பட்டது. அதில், கடை எண், சரக்கு வழங்கும் கிழமை, எந்த நேரத்தில் வர வேண்டும் போன்ற விபரங்கள் அச்சடிக்கப்பட்டன.கடலுார் பஸ் நிலையம் அருகே உள்ள, டாஸ்மாக் கடையில், நேற்று அதிகாலையே, 'குடி'மகன்கள் குவிந்தனர்.
அவர்களுக்கு, போலீசார் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள், நேற்றைய தினம் சரக்கு வாங்குவதற்கான, நீல நிற டோக்கனை வழங்கி, அருகே உள்ள திடலில் அமர வைத்தனர். காலை, 7:00 மணிக்கே டோக்கன் தீர்த்துவிட, அதன்பின் வந்தவர்கள், டோக்கன் கிடைக்காமல் அலைமோதினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, டோக்கன்களை, நகல் கடைகளில் கலர் பிரதி எடுத்து, டோக்கன் ஒன்று, 200 ரூபாய் என விற்று, சிலர் காசு பார்த்தனர்.இந்த கும்பல் முன், கூட்டம் குவியவே, பயந்து, சிறிது நேரத்தில் நழுவி விட்டனர்.போலி டோக்கன் வெற்று காகிதமாக இருந்ததாலும், தாறுமாறாக, 'கட்டிங்' செய்யப்பட்டிருந்ததாலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
விசாரித்தபோது பிளாக்கில், 200 ரூபாய்க்கு வாங்கியதாக தெரிவித்தனர்.இவ்வாறு, போலி டோக்கன் வாங்கிய, 20 பேர் சிக்கினர். இவர்களை போலீசார் வேனில் ஏற்றி, போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். போலி டோக்கன் கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.குவார்ட்டருக்கு கூடுதலாக ரூ.15 கிருஷ்ணகிரியில், 'கொள்ளை'கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று திறக்கப்பட்ட, 'டாஸ்மாக்' கடைகளில், அரசு உயர்த்திய விலையை விட, 15 ரூபாய் வரை கூடுதலாக பெறப்பட்டதால், 'குடி'மகன்கள் அதிருப்தி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 119 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நேற்று காலை, 10:00 மணிக்கு, இவை அனைத்தும் திறக்கப்பட்டன. டோக்கன் வழங்கப்பட்டு, மது வழங்கப்பட்டது.அரசு உயர்த்திய விலையை விட, 'குவார்ட்டர்' பாட்டில் மீது, 15 ரூபாயும், 'ஆப்' பாட்டில் மீது, 30 ரூபாயும் கூடுதலாக பெறப்பட்டது.போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் டாஸ்மாக் கடையில், கூடுதல் விலைக்கு மது விற்றதால், 'குடி'மகன்கள் அதிருப்தியடைந்து, கடை மேற்பார்வையாளர் குமரனிடம் கேட்டனர்.அதற்கு அவர், 'தாசில்தார் அலுவலகத்தில், லஞ்சம் கேட்டால் கொடுப்பதில்லையா?
அதுபோல் இங்கும் கொடுத்து விட்டு போ' என, அலட்சியமாக கூறும் வீடியோ, 'வாட்ஸ் ஆப்'பில் பரவியது.தமிழக அரசு, ஏற்கனவே மதுபான விலையை கணிசமாக உயர்த்தியுள்ள நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள், அதை விட கூடுதல் விலைக்கு விற்பதை, மேலாளர் உட்பட யாரும் கண்டுகொள்ளாததால், 'குடி'மகன்கள் அதிருப்தி அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE