பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளரை தனிமைப்படுத்துவதால் கரும்பு வெட்டும் பணி கடும் பாதிப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

ஈரோடு: வெளிமாநில, வெளி மாவட்ட தொழிலாளர்களை, மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்துவதால், கரும்பு வெட்டும் பணி கடுமையாக பாதித்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, கோபி, சத்தி பகுதிகளில், அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். 12 மாத பயிரான கரும்பு, கொரோனா ஊரடங்கால் பல இடங்களில், 15 மாதமாக வெட்டாமல் உள்ளது. கரும்பு வெட்டும் பணியில் திண்டுக்கல், மதுரை, தஞ்சை, தர்மபுரி, சேலம் மாவட்ட தொழிலாளர்கள், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபடுவர். இதற்காக சில மாதங்கள் தங்கியிருந்து பணி செய்து செல்வார்கள். கொரோனா ஊரடங்கால், சொந்த மாவட்டம் சென்ற தொழிலாளர்கள் திரும்ப முடியவில்லை. இந்நிலையில் அவர்களை, மீண்டும் பணிக்கு அழைத்தால், ஈரோடு மாவட்ட நிர்வாகம், 14 நாட்கள் அவர்களை தனிமை முகாம்களில் தங்க வைக்கிறது. அதன்பின், காய்ச்சல் இல்லை என உறுதிப்படுத்திய பிறகே, கரும்பு வெட்டும் பணிக்கு அனுமதிப்பதாக, விவசாயிகள் கூறுகின்றனர். இதனால், கரும்பு வெட்டும் பணி பாதிக்கப்பட்டதுடன், வெளி மாநில, வெளி மாவட்ட தொழிலாளர்கள், ஈரோடு வர தயக்கம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது: கொரோனாவுக்கு முன்பே, பல தோட்டங்களில் கரும்பு வெட்டும் பணி துவங்கி, பாதியில் நிறுத்தப்பட்டது. சில தோட்டங்களில், 14 மாதங்களுக்கு மேலாகியும், ஆட்கள் கிடைக்காமல் கரும்பு வெட்டப்படாமல் உள்ளது. ஊரடங்கில் விவசாய பணிகளுக்கு முழுவிலக்கு என மத்திய, மாநில அரசு அறிவிக்கிறது. ஆனால், மாவட்ட நிர்வாகம், வெளி மாவட்ட தொழிலாளர்களை, 14 நாட்கள் தனிமைப்படுத்துவதால், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் வரத்தயங்குகின்றனர். குறித்த காலத்தில் வெட்டாவிட்டால், கரும்பின் எடை, பிழிதிறன் குறையும். விவசாயிகள் கடுமையாக பொருளாதார பாதிப்பை சந்திக்க நேரிடும். தவிர, அடுத்தபோக சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. கரும்பை வெட்டி அகற்றினால், பல லட்சம் ரூபாய் இழப்பை விவசாயிகள் சந்திக்க நேரிடும். இப்பிரச்னையில், மாவட்ட நிர்வாகம் சரியான தீர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X