10ம் வகுப்பு தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்: கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்: கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Added : மே 17, 2020
Share

கோபி: ''பத்தாம் வகுப்பு பொது தேர்வில், ஒரு அறையில், 10 பேர் மட்டுமே தேர்வு எழுதுவர். மேலும் ஹால் டிக்கெட், ஆன்லைனில் வழங்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கொரோனா தொற்று நிவாரணமாக, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, சிறப்பு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று நடந்தது. இதில், 75 குழுக்களை சேர்ந்த, 937 உறுப்பினர்களுக்கு, அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் கடனுதவி வழங்கினர்.

பின், நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: பத்தாம் வகுப்புக்கு, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில், பொதுத்தேர்வு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் வசதிக்காக ஐந்து கி.மீ., சுற்றளவுக்கு உட்பட்ட பகுதியிலேயே மையங்கள் அமைக்கப்படும். முன்பு ஒரு தேர்வறைக்கு, 20 தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுதுவர். தற்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஒரு அறைக்கு, 10 பேர் மட்டுமே எழுதவுள்ளனர். விடுதியில் தங்கி பயின்ற, தனியார் பள்ளி மாணவ, மாணவர்கள், அவரவர் வீடுகளுக்கு சென்றிருப்பர். இவர்கள் தேர்வு துவங்கும் முன், மூன்று நாட்களுக்கு முன்பே அழைத்து வரப்பட்டு, தேர்வு முடியும் வரை, உணவு வசதி செய்யப்படும். இப்பணிகள் அனைத்தும், வரும் மே, 29ம் தேதிக்கு முன்பே நிறைவேற்றப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை, அனைத்து மாநிலங்களிலும், ஒருமித்த கருத்தாக உள்ளது. வரும், 21ல் அனைத்து ஆசிரியர்களும், அவரவர் பள்ளிக்கு வர வேண்டும். இவர்கள் மூலம், எந்தெந்த மாணவர்கள், எங்கிருந்து வருகின்றனர், என்ற விபரம் அடங்கிய பட்டியல் பெறப்படும். ஹால் டிக்கெட் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X