டாஸ்மாக்கில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்'கில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை

Added : மே 17, 2020
Share

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில், அரசு உயர்த்திய விலையை விட, 30 ரூபாய் வரை கூடுதலாக பெறப்பட்டதால் குடிமகன்கள் அதிருப்தி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 119 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கடந்த மார்ச், 24ல், நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த, 4ல், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதால், தமிழக எல்லை பகுதியினர், அங்கு படையெடுத்தனர். இதனால், தொற்று அதிகரிக்கும் எனக்கூறி கடந்த, 7ல், தமிழகத்தில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால், மறுநாள், 8ல் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு, டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி பெற்றது. அதனால், நேற்று காலை, 10:00 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 119 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. குடிமகன்களின் கூட்டத்தை குறைக்க, டோக்கன் வழங்கப்பட்டு, மதுபானம் வாங்க அனுமதிக்கப்பட்டனர். டாஸ்மாக் கடைகளில், அரசு உயர்த்திய விலையை விட, 'குவார்ட்டர்' பாட்டில் மீது, 15 ரூபாயும், 'ஆப்' பாட்டில் மீது, 30 ரூபாயும் கூடுதலாக பெறப்பட்டது. போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் டாஸ்மாக் கடையில், கூடுதல் விலைக்கு மது விற்றதால், குடிமகன்கள் அதிருப்தியடைந்து, கடை மேற்பார்வையாளர் குமரனிடம் கேட்ட போது, 'தாசில்தார் அலுவலகத்தில், லஞ்சம் கேட்டால் கொடுப்பதில்லையா. அதுபோல் இங்கும் கொடுத்து விட்டு போ' என, அவர் அலட்சியமாக கூறும் வீடியோ, 'வாட்ஸ் ஆப்'பில் நேற்று வைரலானது. தமிழக அரசு ஏற்கனவே மதுபான விலையை கணிசமாக உயர்த்தியுள்ள நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள், அதை விட கூடுதல் விலைக்கு விற்பதை, டாஸ்மாக் மேலாளர் உட்பட யாரும் கண்டுகொள்ளாததால், குடி மகன்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X