ஓசூர்: தமிழக எல்லை, ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் பணியிலிருந்த, தலைமைக்காவலர் சேட்டு லாரி மோதி பலியானார். அவரது குடும்பத்தினரிடம், அரசு அறிவித்த, 50 லட்சம் ரூபாயை, போலீஸ் ஐ.ஜி., வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கருக்கன்சாவடியை சேர்ந்தவர் சேட்டு, 55; ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், கடந்த, 2003ல், தமிழக போலீசில், இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். ஓசூர் போக்குவரத்து பிரிவில், தலைமை காவலராக பணியாற்றினார். கடந்த, 7ல், அதிகாலை, தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியில், கொரோனா தடுப்பு பணிக்கு அமைத்த சோதனைச்சாவடியில் பணியிலிருந்த போது, அங்கு வந்த கன்டெய்னர் லாரி மோதி பலியானார். அவருக்கு சந்திரா, 45, என்ற மனைவியும், கோமதி, 24, கோகிலா, 23, கோசலை, 14, என்ற மூன்று மகள்களும், ஹரிஹரன், 17, என்ற மகனும் உள்ளனர். கொரோனா தடுப்பு பணியின்போது, விபத்தில் பலியான சேட்டு குடும்பத்துக்கு, முதல்வரின் பொது நிவாரணநிதியிலிருந்து, 50 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் எனவும், முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மாலை, சேலம் சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., பண்டிகங்காதர் முன்னிலையில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா, தலைமை காவலர் சேட்டு குடும்பத்துக்கு, அரசு வழங்கிய, 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE