லக்னோ : தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக நீட்டித்த உத்தரவு தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், உ.பி., அரசு அதனை திரும்ப பெற்றுள்ளது.
சமீபத்தில் உ.பி.,அரசு , தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விதிகள், சரியான நேரத்தில் ஊதியம், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட 4 விதிகள் தவிர்த்து அனைத்து தொழிலாளர்கள் சட்டங்களில் இருந்து மாநிலத்திற்கு விலக்கு அளிப்பதாக அறிவித்திருந்தது. கடந்த மே 8ம் தேதி தலைமை செயலர் வெளியிட்ட அறிவிக்கையில், தொழிற்சாலைகளில் ஒருநாளைக்கு தொழிலாளர்களை 8 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வரை பணியாற்ற அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரம் அதிகரித்தத்தை எதிர்த்து உ.பி.தொழிலாளர்கள் முன்னணி சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் மற்றும் சித்தார்த் வர்மா அடங்கிய் அமர்வு, மாநில அரசு விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை மே 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது. உ.பி.,யில் முக்கிய தொழிலாளர் சட்டங்கள் 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தொடர்கிறது. ஆனால் மே 15ம் தேதியிட்ட உத்தரவில், தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை அதிகரிப்பதற்கான உத்தரவு மட்டும் தனி ஆணை மூலம் வாபஸ் பெறப்படுவதாக உ.பி.,அரசு தெரிவித்துள்ளது.
பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்) சார்பில் உ.பி.,ம.பி., மற்றும் குஜராத் மாநிலங்களில் தொழிலாளர்கள் நல சட்டங்களை திருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20ம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE