புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து வெளியேற முடியாமல் இருந்த 160-க்கும் மேற்பட்ட இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இன்று ஏர் இந்தியா விமானம் மூலம் ஐதராபாத்திற்கு அழைத்து வந்தனர்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களை திருப்பி அழைத்துவர மே 7ம் தேதி வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் சனிக்கிழமை தொடங்கியது. இதற்காக 40 நாடுகளுக்கு 149 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் ஏர் இந்தியாவின் AI 126 விமானம் அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து 168 இந்தியர்களை அழைத்துக்கொண்டு இன்று (மே 17) காலை ஐதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

இதற்காக விமான நிலையத்தின் பிரதான பயணிகள் முனையம் முழுதும் சுத்திகரித்து தூய்மையாக்கி இருந்தனர். விமானத்திலிருந்து வந்த அனைத்து பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் தலா 20-25 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு, வெப்ப கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட பின்னர் சமூக இடைவெளியுடன் வெளியே கொண்டு வரப்பட்டனர். அதே சமயத்தில் ஐதராபாத்தில் இருந்து டில்லி வழியாக 68 பயணிகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE