புதுடில்லி: இந்திய எல்லையருகே உள்ள கல்வான் பகுதியில் சீன முகாம்களை அமைத்து வருகிறது. லடாக் அருகே இந்த பகுதி அமைந்துள்ளதால், அங்கு இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
சமீப நாட்களாக, எல்லை கட்டுப்பாட்டு கோடருகே சீன ராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், இரு நாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டு சிலர் காயமடைந்தனர். லடாக் அருகே, சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டன. இதனையறிந்த இந்தியாவின் ‛சுகோய் - 39' ரக போர் எல்லைப்பகுதிக்கு விரைந்தன.
இந்நிலையில் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் டெண்ட் அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து லடாக் பகுதியில் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், எல்லைப்பகுதியில், நமது நடமாட்டத்தை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு வீரர்கள் நேருக்கு நேர் சந்திப்பது கடந்த காலங்களில் நடந்துள்ளது. ஆனால், தற்போது அது ஒரு வாரத்திற்கு மேல் நீடிப்பது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள டெம்சாக் பகுதியில் சீன ராணுவம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் பகுதியில் நிலவி வரும் மாற்றத்தை டில்லியில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நிலவும் கருத்து வேறுபாடு மோதலுக்கு வழிவகுக்கிறது. ஆனால், அதனை தீர்ப்பதற்கு விரிவான நெறிமுறைகள் உள்ளன எனக்கூறினார். இந்தோ - பசுபிக் பாதுகாப்பில் அமெரிக்காவின் சொல்கேட்டு இந்தியா நடப்பதாக சந்தேகத்தில் சீனா அத்துமீறி நடந்து வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தடம் பதிக்க விரும்புகிறது. இது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE