சென்னை : மின் வினியோகத்தில், பாதுகாப்பான முறையில், முழு கவனத்துடன் பணியாற்றும்படி, ஊழியர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், ஊரடங்கால், ஒன்றரை மாதங்களாக, தினசரி மின் தேவை, 11 ஆயிரம் மெகா வாட்டிற்கு கீழ் குறைந்திருந்தது. தற்போது, வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில், தொழில் நிறுவனங்கள் செயல்பட, அரசு அனுமதி வழங்கியதால், மின் தேவை அதிகரித்து வருகிறது. கோடை வெயிலும் சுட்டெரித்து வருவதால், வீடுகளில், 'ஏசி' உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி போன்றவற்றில் பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படுகிறது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில், இனி, கடைகள், தொழில் நிறுவனங்கள், முழு வீச்சில் செயல்படும் என்பதால், மின் தேவை தொடர்ந்து அதிகரிக்கும்; அதற்கேற்ப, சீராக மின் வினியோகம் செய்யப்படும்.இதற்காக, துணைமின் நிலையங்களில் இருந்து, மின்சாரம் செல்லும் மின் வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்து, சேதமடைந்த சாதனங்களை விரைந்து சீரமைக்குமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
ஊழியர்களுக்கு, முகக் கவசம், கையுறை போன்ற வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE