சென்னை:தமிழகத்தில், கொரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்த வசதியாக, மே, 31 நள்ளிரவு, 12:00 மணி வரை, ஊரடங்கை நீட்டித்து, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். கொரோனாவை விரட்டியடித்த, 25 மாவட்டங்களில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், புதிதாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை உட்பட, 12 மாவட்டங்களில், புதிய தளர்வுகள் இல்லை என, அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், மூன்றாம் கட்ட ஊரடங்கு, நேற்று நிறைவடைந்தது. மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, கொரோனா கட்டுக்குள் வந்த மாவட்டங்களிலாவது தளர்த்தப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பில், மக்கள் இருந்தனர். எதிர்பார்த்த வகையில் நோய் தொற்று குறையாததால், நான்காம் கட்ட ஊரடங்கை, முதல்வர் நேற்று அறிவித்தார்.
இதன்படி, ஊரடங்கு உத்தரவு, வரும், 31 நள்ளிரவு, 12:00 மணி வரை, ஏற்கனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருது தடை
* பள்ளிகள், கல்லுாரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் வழிபாட்டு தலங்களில், பொதுமக்கள் வழிபாடு நடத்த, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தவும், தடை தொடர்கிறது
*சினிமா தியேட்டர்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் திறக்க அனுமதி இல்லை அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றுக்கும் தடை தொடர்கிறது
* விமானம், ரயில், பஸ் போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையிலான ரயில் போக்கு வரத்து, சென்னை மாநகரில் இருந்து, பிற பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து ஆகிய வற்றுக்கு அனுமதி கிடையாது
* மத்திய, மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும், விமானம், ரயில், பொது பஸ் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்
* டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷா, மெட்ரோ ரயில், மின்சார ரயில்கள் ஓடாது. பணியாளர் விடுதி தவிர்த்து, பிற தங்கும் விடுதிகள், தங்கும் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் ஆகியவை செயல்படாது
* இறுதி ஊர்வலங்களில், 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.
நடைமுறை கட்டுப்பாடுகள்
* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலுார், பெரம்பலுார் ஆகிய, 12 மாவட்டங்களில், ஏற்கனவே உள்ள நடைமுறையில், எந்த மாற்றமும் இல்லாமல், கட்டுப்பாடுகள் தொடரும். புதிய தளர்வுகள் எதுவும் இல்லை
*நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு, வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது
* தமிழகம் முழுவதும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எவ்வித தளர்வுகளும் இல்லாமல், ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்
* சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, பிற பகுதிகளில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்
* தமிழகத்தின் மற்ற பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, பிற பகுதிகளில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு, அனுமதி தொடரும்
25 மாவட்டத்தில் நிம்மதி
* கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், நீலகிரி ஆகிய, 25 மாவட்ட மக்களுக்கு நிம்மதி தரும் வகையில், சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது
* அந்த மாவட்டங்களுக்குள், 'இ- - பாஸ்' இல்லாமல், போக்குவரத்து வாகனங்களை இயக்க, தளர்வு அளிக்கப்பட்டள்ளது
* மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும், போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
* ஒரு மாவட்டத்தில் இருந்து, இன்னொரு மாவட்டத்திற்கு, 'இ -- பாஸ்' பெற்று செல்லும் நடைமுறை தொடரும்
* அரசுப் பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு, சிறப்பு அனுமதியுடன் இயக்கப்படும், அரசு மற்றும் தனியார் பஸ்களில், அதிகபட்சமாக, 20 பேர்; வேன்களில் ஏழு பேர்; இனோவா போன்ற பெரிய வகை கார்களில் மூவர், சிறிய கார்களில், டிரைவர் தவிர்த்து இருவர் செல்லலாம்
* மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள, 25 மாவட்டங்களில், 'இ -- பாஸ்' இல்லாமல், வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை, வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும், பயணம் செய்ய பயன்படுத்த வேண்டும்
* தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் செல்வதை, பொதுமக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
புதிய சலுகைகள்
* தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், தற்போதுள்ள, 50 சதவீத பணியாளர்களை, 100 சதவீத பணியாளர்களாக உயர்த்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
* சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர, தமிழகத்தில் உள்ள, அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், 100 பேருக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீத பணியாளர்கள்; 100 பேருக்கு மேல் உள்ள தொழிற் சாலைகளில், 50 சதவீதப் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம், 100 பேருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது
* ஊரடங்கு காலத்தில், தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும், தனியார் மற்றும் வியாபார நிறுவனங்கள், அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக மட்டும், குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கலாம்
* பிளஸ் 2 தேர்வு விடைத்தாளர்கள் திருத்தும் பணிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
விளையாட்டு பயிற்சி
* தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு, தனி பயிற்சியாளர் வழியே, பயிற்சி பெற விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட, மாவட்ட கலெக்டர், சென்னை மாநராட்சி கமிஷனரிடம், அனுமதி பெற வேண்டும்
* மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படாத, 12 மாவட்டங்களில், 'இ -- பாஸ்' உடன், மருத்துவ சிகிச்சைக்கு மட்டும், டாக்சி, ஆட்டோவில் செல்ல, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
பொதுவானவை
* அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மாநகராட்சி கமிஷனர்களும், அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை, உறுதி செய்ய வேண்டும். பொது இடங்களில், ஐந்து பேருக்கு மேல் கூடாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்
* நோய் தொற்றின் பரவலை, தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய் தொற்று குறைய, குறைய, தமிழக அரசு மேலும் தளர்வுகளை அறிவிக்கும்
* அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தர வேண்டும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
வெளிநாட்டினர் திரும்ப நடவடிக்கை
வெளிநாடுகளில் இருந்து, 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், 10 சிறப்பு விமானங்களில், 1,665 பேர்; இரண்டு கப்பல்களில், 264 பேர், தமிழகம் திரும்பியுள்ளனர்.வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்ப, மேலும் பல தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசுடன் இணைந்து, அவர்களை அழைத்து வர, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பிற மாநிலங்களில் இருந்து, தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களை, சிறப்பு ரயில்களில், படிப்படியாக அழைத்து வரவும், நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வாரத்தின் இரண்டு நாட்கள், டில்லியில் இருந்து, சென்னைக்கு, ராஜதானி விரைவு ரயில் இயக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE