புதுடில்லி:பொருளாதார மீட்பு நடவடிக்கைகளின் கீழ், 'அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படும்; ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு, கூடுதலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்' என்பது உட்பட பல அறிவிப்புகளை, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
ஐந்து நாட்களில், 20.98 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். 'ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து பல்வேறு துறைகளை, மக்களை மீட்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார அறிவிப்புகள் வெளியிடப் படும்' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதன்படி, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், கடந்த, நான்கு நாட்களாக, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்த வரிசையில், ஐந்தாவது நாளாக, நேற்றும் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:முதல் நான்கு நாட்களில், பல்வேறு துறைகளையும், மக்களையும், சுயசார்புடன் இருக்கும் வகையில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டோம். அந்த வரிசையில், ஏழு துறைகளுக்கான சீர்திருத்த அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்
வெளி மாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், தங்களுடைய சொந்த மாநிலத்தில் பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதற்காக, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு, ஏற்கனவே ஒதுக்கப்பட்டு உள்ள, 61 ஆயிரம் கோடி ரூபாயைத் தவிர, கூடுதலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
சுகாதாரம்
சுகாதாரத் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் செய்ய வேண்டிய நேரம் இது.இந்தத் துறையில் அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டும். பொது சுகாதாரத் துறை, வட்டார அளவில் மேம்படுத்தப்பட வேண்டும்.தொற்றுநோய் மருத்துவமனைகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்படும். அதேபோல் பொது சுகாதார பரிசோதனை மையங்களும், ஒவ்வொரு வட்டார அளவிலும் நிறுவப்படும். தனியாரும் இதில் ஈடுபடுத்தப்படுவர்.
கல்வி
பிரதமர் இ - வித்யா திட்டத்தின்கீழ், இணைய வழி கல்வி கற்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் படும். இதன் கீழ், பள்ளிக் கல்விக்கென, நாடு முழுவதற்குமான ஒரு பாட திட்டம் அறிமுகம் செய்யப்படும். ஒவ்வொரு வகுப்பிற்கும் என, தனி, 'டிவி' சேனல் உருவாக்கப்படும். 'மனோதர்பன்' என்ற பெயரில், குழந்தைகள் மற்றும் பெற்றோரை மனரீதியில் உறுதிபடுத்தும் திட்டமும் அறிமுகம் செய்யப்படும்.
தொழில் நிறுவனங்கள்
எம்.எஸ்.எம்.இ., எனப்படும் குறு, சிறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களுக்கு எதிரான, திவால் நடவடிக்கைகளில் திருத்தம் செய்யப்படும். திவால் நடவடிக்கைக்கான குறைந்தபட்ச தொகை, 1 லட்சம் ரூபாயில் இருந்து, 1 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது.மேலும், கொரோனா வைரஸ் காலத்தில் செலுத்தாத கடன்கள், செலுத்த தவறிய கடன்களாக பார்க்கப்படாது. அதனால், திவால் நடவடிக்கை எடுக்கப்படாது. ஓராண்டு வரை புதிதாக, திவால் நடவடிக்கைகள் எடுக்கப்படாது.
கம்பெனிகள் சட்டம்
கம்பெனிகள் சட்டத்தின் கீழ் உள்ள, அபராதங்கள் மட்டுமே உள்ள ஏழு குற்றப் பிரிவுகள் கைவிடப்படுகின்றன. மேலும், ஐந்து குற்றங்கள், மாற்று வழிகளில் கையாளப்படும். இதனால், நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது குறையும். நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். இதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்படும்.
பொதுத் துறை நிறுவனங்கள்
பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்பான கொள்கையை விரைவில் வெளியிட உள்ளோம். பாதுகாப்பு துறையில், தனியாருக்கும் அனுமதி அளிக்கப்படும். மற்ற பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படும்.இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள பங்குச் சந்தையிலும் பங்கேற்றலாம்.
மாநிலங்களுக்கு உதவி
மாநில அரசுகளின் வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. மத்திய அரசின் வருவாய் குறைந்தபோதும், மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.
இந்த, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், 12 ஆயிரத்து, 390 கோடி ரூபாய் மதிப்புள்ள வருவாய் இழப்பீடு மானியம் வழங்கப்பட்டுள்ளது.அதேபோல், வரிகளில் மாநிலங்களுக்கான பங்கான, 46 ஆயிரத்து, 38 கோடி ரூபாய், ஏப்ரல் மாதத்தில் முழுதும் வழங்கப்பட்டுள்ளது.மாநிலங்கள், தங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கடன்களில், 14 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளன. மீதமுள்ள, 86 சதவீதம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கடன் பெறும் அளவு, 3 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.இதன் மூலம், மாநிலங்களுக்கு, கூடுதலாக, 4.28 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
ரூ. 20.97 லட்சம் கோடி
ஐந்து நாள் அறிவிப்புகளின் தொகுப்பு:விவரம் ரூ. கோடியில்
முதல் நாள் திட்டங்கள் 5,94,550
இரண்டாம் நாள் திட்டங்கள் 3,10,000
மூன்றாம் நாள் திட்டங்கள் 1,50,000
நான்கு மற்றும் ஐந்தாம் நாள் திட்டங்கள் 48,100
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்புகள் 8,01,603
பிரதமர் ஏழ்மை ஒழிப்பு திட்டங்கள் 1,92,800
மொத்தம் 20,97,053
ராகுலை கிண்டல் செய்த நிர்மலா
டில்லியில் இருந்து சொந்த மாநிலம் திரும்பிய வெளிமாநிலத் தொழிலாளர்களை, காங்., முன்னாள் தலைவர், ராகுல், நேற்று முன்தினம் சந்தித்தார். சாலையோரங்களில் அமர்ந்து, அவர்களிடம் நலம் விசாரித்தார்.நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இது குறித்த கேள்விக்கு, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:சாலையில் அமர்ந்து பேசி, அவர்களுடைய நேரத்தை வீணடித்துள்ளார்.
அதற்கு பதிலாக, அவர்களுடைய சூட்கேஸ்களை சுமந்து சென்று உதவியிருக்கலாம். காங்., ஆளும் மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு, தேவையான உதவி செய்ய, அந்த மாநில அரசுகளை, அவர் கேட்டுக் கொள்ளலாம். இது வெறும் அரசியல் நாடகம் தான்.இந்த இக்கட்டான நேரத்தில், இதுபோன்ற சில்லரைத்தனமாக விஷயங்களில் ஈடுபடுவதைவிட்டு, பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். காங்., தலைவர், சோனியாவிடம் இதை கோரிக்கையாக வைக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த அறிவிப்புகள், நாட்டின் சுகாதார மற்றும் கல்வித் துறையில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். தொழில் துறையினர், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கிராமப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலான அறிவிப்புகள் பாராட்டுக்குரியவை.-நரேந்திர மோடி, பிரதமர்
தொழில் துறையினருக்கும், கிராம பொருளாதாரத்திற்கும் ஊக்கம் அளிக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டை சுய சார்பு உடையதாக்கும் முயற்சிக்கு இவை பெருமளவில் உதவும்.-அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு, கூடுதலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, மிகச் சிறந்த அறிவிப்பு. இது, சொந்த மாநிலம் சென்றுள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழி வகை செய்துள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது, பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு உள்ள அக்கறை, இதில் தெரிகிறது.-ஜே.பி. நட்டா, பா.ஜ., தலைவர்
மீண்டும் மக்களை ஏமாற்றும் முயற்சி நடந்துள்ளது. அரசு அறிவித்துள்ளது, வெறும், 3.22 லட்சம் கோடிக்கான திட்டங்களே. ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1.6 சதவீதம் மட்டுமே, இந்த திட்டங்கள். ஏழை, எளிய மக்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் கைகளில் பணத்தை கொடுக்க வேண்டும். ஆனால், சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் மோசடி நடந்துள்ளது. தன் அறிவிப்புகள் எந்த வகையில், மக்களுக்கு உதவும் என்பது குறித்து
விவாதிக்க, நிர்மலா சீதாராமன் முன்வர வேண்டும். -ஆனந்த் சர்மா, செய்தித் தொடர்பாளர், காங்.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE