பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாட்டு சந்தையில், சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் தீவிர பணியாற்றி வருகின்றனர்.பொள்ளாச்சியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 170.22 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கின்றன.அதில், மரப்பேட்டை வீதி, சந்தை, ராஜாராம் லே-அவுட், பாலக்காடு ரோடு, குமரன் நகர் தெற்கு ஆகிய பகுதிகள் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அந்த மண்டலங்களில், கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்படுகிறது.மேலும், தாழ்வான பகுதியில், நீரேற்று நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில், கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள், 165 கிலோ மீட்டர் துாரத்தில், 160 கி.மீ.,க்கு முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 7ஆயிரத்து, 400 ஆள் இறங்கு குழிகளில், 7 ஆயிரத்து, 100 குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.காந்தி மார்க்கெட் சந்தை அருகே மாட்டுச்சந்தையில், கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.சுத்திகரிப்பு நிலைய பணி நடைபெறும் இடம் அருகேயே மாட்டுச்சந்தைக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 11.25 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், கடந்த ஒன்றரை மாதமாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. அரசு உத்தரவின் படி, கடந்த சில வாரங்களாக பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அதில், சுத்திகரிப்பு நிலைய பணிகள், 85 சதவீதம் முடிந்துள்ளது. தற்போது, கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய கூடிய, 'டிகேன்டர்' எனப்படும் உபகரணம், சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது.சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த உபகரணம் பொருத்தி, சுத்திகரிப்பு செய்யும் முக்கியப்பணி நடக்கும். தற்போது, பாதாள சாக்கடை திட்டப்பணிகள், 90 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில், இந்த பணிகளையும் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE