சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

கொரோனா தடுப்பில் உதவும் தாமிரம்!

Updated : மே 19, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
 கொரோனா, தடுப்பில் ,உதவும் ,தாமிரம்!

எப்போதுமே பிரச்னையில் இருந்து தான் புதிய வாய்ப்புகள் தோன்றும். கொரோனாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ரசாயனம், தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள், புதிய வாசல்களைத் திறந்துள்ளன. அதுவும், தாமிரம், கொரோனா தடுப்புக்கு இவ்வளவு துாரம் பயன் தரும் என்று யாரும் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள்.

உலகமெங்கும் முகக் கவசத்துக்கான தேவை, நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதுவும், என் 95 முகக் கவசங்கள் மிகவும் பாதுகாப்பானவை யாக கருதப்படுகின்றன. காரணம்,
அதன் நுண்துளைகள்.


'ரெஸ்பிலான்'

அது, 0.3 மைக்ரான் அளவுக்கு விட்டமுள்ள நுண்ணுயிரியைக் கூட வடிக்கட்டிவிடும். ஆனால், கொரோனா வைரசோ, 0.5 மைக்ரான் முதல் 0.2 மைக்ரான் வரை விட்டம் உள்ளது. என் 95 முகக் கவசத்தில் உள்ள பல்வேறு அடுக்குகள் காரணமாக, வைரஸ் உள்ளே நுழையாமல் தடுக்கப்படுகிறது. பிரச்னை என்னவென்றால், இதை ஒருமுறை தான் பயன்படுத்த முடியும்.அதேபோல், தேவைக்கேற்ப உற்பத்தி அவ்வளவு வேகமாக இல்லை. அதற்கு ஆகும் செலவும் கணிசமானது. இந்நிலையில், ஏற்கனவே பயன்படுத்திய என் 95 முகக்கவசத்தையே மறுபடியும் பயன்படுத்த முடியுமா என்று யோசிக்கத் தொடங்கினர் ஆய்வாளர்கள்.

இங்கே தான் தாமிரம் கைகொடுத்தது. நுண்ணுயிரிகளை எதிர்க்கும் தன்மை தாமிரத்துக்கு உண்டு; அது கொரோனா வைரஸை நான்கு மணிநேரத்தில் கொன்றுவிடும் என்பதும்,
எண்ணற்ற ஆய்வுகள் மூலம்நிரூபிக்கப்பட்டுள்ளன.அதாவது, முகக் கவசத்தின் மீதுள்ள தாமிர பூச்சு, கொரோனா வைரசைத் தனக்குள் ஈர்த்து, அவற்றைச்செயலிழக்க வைத்து விடுகிறது என்று, ஆய்வுகள் சொல்கின்றன.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு நாட்டு ஆய்வாளர்கள், தாமிரப் பூச்சுள்ள முகக் கவசங்களை உற்பத்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 'அர்கமான்' என்ற இஸ்ரேல் நாட்டு பைபர் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ள முகக் கவசத்தில், நான்கு அடுக்கு தாமிரப்
படலங்கள் உள்ளன.அதேபோல், செக் குடியரசைச் சேர்ந்த, 'ரெஸ்பிலான்' என்ற நிறுவனம், தாமிர ஆக்ஸைட் வடிகட்டிகளை கொண்ட முகக் கவசங்களை உருவாக்கியுள்ளது.

இதேபோல், பிரிட்டனில் உள்ள பல்வேறு துணி உற்பத்தி நிறுவனங்கள், முகக் கவசத்தில்,
தாமிரப் படலங்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை, 30 முறை வரை துவைத்துப்
பயன்படுத்தலாம். அப்போதும், கொரோனா வைரசை இந்த முகக் கவசங்கள் தடுக்கும்.தாமிரத்தை மருத்துவமனைத் தேவைகளுக்காக பயன்படுத்தலாம் என்று முதன்முதலில்
தெரிவித்தவர் நுண்ணுயிர் ஆய்வாளர் பிலிஸ் குன். இவரது நிறுவனம், தாமிர வலை முகக்
கவசங்களையும், வழக்கமான துணி முகக் கவசங்களோடு சேர்த்துப் பொருத்தக்கூடிய தாமிர உள்ளடுக்குகளையும் உற்பத்தி செய்கிறது.


தாமிர ஸ்ப்ரேஆஸ்திரேலியாவில், இதன் இன்னொரு பயன்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அங்கே, 'ஸ்பீடு 3டி' என்ற நிறுவனம் இருக்கிறது. இது, தாமிரம் மற்றும் அலுமினியத்தை வைத்து, முப்பரிமாண முறையில் பொருட்களை அச்சடித்துத் தரும். ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை மற்றும்
அமெரிக்க கடற்படை பிரிவுகளுக்கு இந்த நிறுவனம், 3டி முறையில் கருவிகளை உற்பத்தி செய்து கொடுத்து வந்தது.

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவுடன், இந்நிறுவனம் தாமிரப் பூச்சு பற்றி ஆய்வுகளை மேற்கொண்டது. தாமிர மேற்பரப்புகளில் படியும் கொரோனா வைரஸ், இரண்டு மணி நேரத்தில், 96 சதவீதம் அழிந்து விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்'
மேற்பரப்புகளில், கொரோனா வைரஸ் நீண்ட நேரம்உயிருடன் இருப்பதும் தெரியவந்தது.
இந்த முடிவுகளை மனத்தில் இருத்தி, இந்நிறுவனம், புதிய உத்தி ஒன்றை உருவாக்கியது. பொதுமக்கள் வழக்கமாக பயன்படுத்தும் கைப்பிடிகள், கதவைத் தள்ளும் பிடிகள் ஆகிய
இடங்களில் தாமிர பூச்சுகளை, ஸ்பிரே செய்யத் தொடங்கியது.

அதாவது, ஏற்கனவே இருக்கும் பரப்பின் மீதே, தாமிர ஸ்ப்ரே மூலம், மற்றொரு படலம்
உருவாக்கப்பட்டது.இதன் பயன்பாட்டை அறிந்துகொண்ட ஆஸ்திரேலிய அரசாங்கம், இந்த நிறுவனத்தை அழைத்து, வாய்ப்பு கொடுத்துள்ளது.அவர்களுடைய அலுவலகங்கள் அனைத்தும் இயங்கத் தொடங்குவதற்கு முன்பு, அத்தனை கைப்பிடிகளையும், தாமிர முலாம் பூசச் சொல்லி இருக்கிறது.

இன்னொரு புத்திசாலித்தனமான ஐடியாவையும், பிரிட்டனில் உள்ள நிறுவனம் ஒன்று கண்டுபிடித்திருக்கிறது. எந்தப் பொருளாக இருந்தாலும், தொட்டால் தானே, கையில் வைரஸ் ஒட்டிக்கொள்ளும்!அதற்கு மாற்றாக, நம்ம ஊர் சோடா பாட்டில் ஓப்பனர் மாதிரி ஒரு திருகை கண்டுபிடித்திருக்கிறது, 'சைலாடெக்' என்ற நிறுவனம். இதற்கு 'கீப்சேப்' என்றே பெயரிட்டு
இருக்கின்றனர்.
வெளிநாடுகளில் நடைபெறும் ஆய்வுகள் மற்றும் முயற்சிகளைப் படித்துக் கொண்டிருந்த போது, நம்ம ஊரில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. இங்கே இரண்டு ஆச்சரியங்கள் காத்திருந்தன.பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் வேதியியல் துறைப்
பேராசிரியர் சுரீந்தர் குமார் மேத்தா. இவரது தலைமையிலான குழு, தாமிரத்தை அடிப்படையாக கொண்ட நுண்துகள் படலம் உருவாக்கும் ஸ்ப்ரேவை தயாரித்துள்ளனர்.

இதைக் கொண்டு, முகக் கவசங்கள், மற்றும் பி.பி.இ., என்று சொல்லப்படும், 'தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள்' மீது, தாமிர முலாமைப் பூசமுடியும் என்று நிரூபித்துள்ளனர்.இந்தத் தாமிர முலாம், 45 நாட்கள் வரை அப்படியே இருக்கும். அதனால், அங்கே கொரோனா வைரஸ் படியவே படியாது என்கின்றனர்.


95 முகக் கவசங்கள்

நம் அருகே, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலேயே ஓர் ஆய்வுக்கு, மத்திய அறிவியல் தொழிநுட்பத் துறை நிதி உதவி அளித்திருக்கிறது. தாமிரத்தை அடிப்படையாக கொண்ட ஒரு வடிகட்டியை உருவாக்கும் திட்டத்துக்கே இந்த அனுமதியும் நிதியுதவியும் கிடைத்துள்ளது.
வேதியியல் துறை பேராசிரியரான ஆர். மயில்முருகன் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வின் மூலம் உருவாக்கப்படும் வடிகட்டி, வழக்கமான என் 95 முகக் கவசங்கள், சர்ஜிக்கல்
முகக் கவசங்களை விடச் சிறப்பாக செயல்படும்.

பொது இடங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், ஷாப்பிங் மால்கள், கூட்ட அறைகள் ஆகியவற்றில் இந்த வடிகட்டிகளை போட்டுக்கொண்டால், ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் பரவாது. தாமிரத்தை அடிப்படையாக கொண்ட நுண்ணுயிர் வடிக்கட்டியே, அந்த வைரசை கொன்றுவிடும் என்று தெரிவித்துள்ளார் ஆர்.மயில்முருகன்.

அந்தக் காலத்தில் வீட்டில் வெண்கல மற்றும் தாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவர். அது காலமாற்றத்தில் வழக்கொழிந்து எங்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தான் கோலோச்சுகிறது. கொரோனா கிருமி, மீண்டும் தாமிரத்தின் மகிமையைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது
என்றால்அது மிகையில்லை.
வெ.சுபாஷிணி

இ -மெயில்:
vsubhashini27@gmail.com

தொடர்புக்கு:

98410 53881

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
18-மே-202023:28:46 IST Report Abuse
unmaitamil தாமிரத்திற்கு எங்குபோவது ??? ஸ்டெரிலைட் தான் மூடியாசே ??? நாட்டின் நலன்கருதி ஸ்டெரிலைட் ஆலையை சுடலைக்கும் , காய் அக்காவுக்கும் விற்றுவிட்டு, ஆலையை தொடங்கலாம். சர்ச் பாதர்களை ஆலோசனை அதிகாரிகளாக நியமிக்கலாம். சுற்றுப்புற மாசு எப்படி நாசமானாலும், இவர்கள் குறைக்கும் ஆட்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசி அடக்கிவிடுவார்கள்.
Rate this:
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
18-மே-202023:16:45 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) முன்பு தாமிரத்தால் ஆன காசுகளை கோவில் குளத்தில் வீசுவார்கள். காரணம் அவை கிருமிகளை கொல்ல உதவும் என்கிற அறிவியல் தான். மூடநம்பிக்கை என்று கூறி அதையும் கெடுத்துவிட்டார்கள்..
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
18-மே-202022:38:29 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி சீனாதான் அதிகம் தாமிரம் ஏற்றுமதி செய்யும் நாடு. நம் நாட்டில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஸ்டெர்லைட்டைக் காலி செய்தாயிற்று. இன்னும் எங்காவது இருந்தால் அதையும் மூட போராட்டங்கள் தொடங்கட்டும். சீனாவிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம். நம்ம ஊரு காம்ரேட்டுகளுக்கு மனது திருப்தியாகவும் இருக்கும். ஸ்டெர்லைட் மூடும் போராட்டத்தின் பின்னணியைப் பற்றய சந்தேகம் இப்போது கொஞ்சம் கூடுதலாகவே தெரிகிறது. கோறானோ ஸ்டெர்லைட் எல்லாமே ஏதோ நீண்டகாலமாகத் திட்டமிட்ட ஒரு செயலோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X