களைகட்டியது டாஸ்மாக் வியாபாரம்: டோக்கனுடன் குடிமகன்கள் அணிவகுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

களைகட்டியது 'டாஸ்மாக்' வியாபாரம்: டோக்கனுடன் 'குடி'மகன்கள் அணிவகுப்பு

Added : மே 18, 2020
Share
 களைகட்டியது 'டாஸ்மாக்' வியாபாரம்: டோக்கனுடன் 'குடி'மகன்கள் அணிவகுப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் உள்ள, 'டாஸ்மாக்' கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டு, 'குடி'மகன்களுக்கு வண்ண வண்ண டோக்கன்கள் வழங்கப்பட்டு, மது விற்பனை செய்யப்பட்டது.தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.கடந்த, 7ம் தேதி, கோவை தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் இயங்கும், 136 கடைகளில், 92 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. இதனால், கடைகளில் பயங்கர கூட்ட நெரிசல் காணப்பட்டது.அதை தவிர்க்கும் வகையில், அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. மது வாங்க வருவோருக்கு, ஒரு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் வகையில், நேரம் குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டன.கடைகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஒலிபெருக்கி மூலம் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.கடந்த முறை போல், அடித்து பிடித்து மது வாங்காமல், 'குடி'மகன்கள் ஒழுங்கை கடைப்பிடித்து வரிசையில் நின்று 'சரக்கு' வாங்கினர்.ஒரு சில கடைகளில், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல், மது வாங்க வந்தவர்கள் அவசரப்பட்ட போது, டாஸ்மாக் ஊழியர்கள் அவர்களுக்கு மது விற்பனை செய்யாமல், திருப்பி அனுப்பினர்.* கிணத்துக்கடவு பகுதியில் உள்ள, ஏழு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கடைகள் முன் 'குடி'மகன்கள் சமூக விலகலுடன் நிற்பதற்கு மரத்தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.வரிசையில் நிற்கும் குடிமகன்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டது. கடைக்கு அருகில் கிருமிநாசினி கொடுத்து கைகளை சுத்தப்படுத்திய பின், 'சரக்கு' வாங்க அனுமதிக்கப்பட்டனர்.* ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு சுற்றுப்பகுதியில் உள்ள, 12 டாஸ்மாக் கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. கடைகளில் 'குடி'மகன்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அரசு அனுமதித்த அளவுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.ஒரு மணி நேரத்துக்கு, 70 பேர் என்ற அடிப்படையில், 'சரக்கு' விற்பனை நடந்தது. பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், அரசு நிர்ணயித்த விலையை விட, குவார்ட்டருக்கு, 30 ரூபாய்; 'பீர்' வகைகளுக்கு, 30 ரூபாய் வரையிலும், கூடுதல் விலை வைத்து, சட்டவிரோத விற்பனை நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X