கொரோனா மாதிரி சேகரிப்பு: ஜி.பி.எஸ்., மூலம் தேர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா மாதிரி சேகரிப்பு: 'ஜி.பி.எஸ்.,' மூலம் தேர்வு

Added : மே 18, 2020
Share
 கொரோனா மாதிரி சேகரிப்பு: 'ஜி.பி.எஸ்.,' மூலம் தேர்வு

ஆனைமலை:மருத்துவ மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் குழுவினர், கோட்டூரில் கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய, 40 பேரிடம் மாதிரி சேகரித்தனர்.மத்திய அரசின், மருத்துவ மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் அண்டு ரிசர்ச்- -- ஐ.சி.எம்.ஆர்.,) நாடு முழுவதிலும் கொரோனா பரவலின் நிலையை கண்டறிய திட்டமிட்டது. இதற்காக, ஜி.பி.எஸ்., மூலம் நாடு முழுவதிலும் சில இடங்களை தேர்வு செய்து, மாதிரிகள் சேகரித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம், ஆனைமலை அடுத்த கோட்டூர் பேரூராட்சி பகுதிகளில், கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய, 40 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டன. 18 வயதுக்கு மேற்பட்ட, 40 பேர் தேர்வு செய்யப்பட்டு, பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து வந்த மருத்துவ குழுவினர் மாதிரி சேகரித்தனர். பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மருத்துவ மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில், ஜி.பி.எஸ்., மூலம் 'ரேண்டம்' முறையில், நாடு முழுவதிலும் இடங்களை தேர்வு செய்து, மாதிரி சேகரித்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில், கோட்டூர், காட்டம்பட்டி, சுல்தான்பேட்டை பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவினர், 'ரேபிட் டெஸ்ட் கிட்' மூலம் மாதிரி சேகரித்துள்ளனர். மாதிரிகள் முடிவின் அடிப்படையில், நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவல் எப்படி உள்ளது என கண்டறிய முடியும். இவ்வாறு, தெரிவித்தனர்.கிணத்துக்கடவுநெகமம் அடுத்துள்ள காட்டம்பட்டியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக உறுப்பினர்கள், பொதுமக்களிடம் இருந்து இரத்த மாதிரி சேகரித்தனர்.
கிராமத்தில் உள்ள 40 வீடுகளுக்கு சென்று, குடும்பத்தில் உள்ள ஒருவரை மொபைல் ஆப்பில் இருந்து இரத்த மாதிரி எடுப்பதற்கு தேர்வு செய்து, இரத்த மாதிரிகளை எடுத்தனர். இதில், சென்னை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக டாக்டர் உதயகுமார், மைக்ரோ பயோலாஜி அக்சிதா, மாவட்ட பயிற்சி குழு டாக்டர் ஜோ டேனியல், நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா, வடசித்துார் டாக்டர் காமாட்சி, சுகாதார பணியாளர் குணசேகரன், வட்டார விரிவாக்க கல்வியாளர் ஜோதிமணி, ஆய்வக நுட்பனர், சுகாதார செவிலியர் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X