அரசியலுக்கு லாயக்கு இல்லை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அரசியலுக்கு லாயக்கு இல்லை!

Added : மே 18, 2020 | கருத்துகள் (1)
Share
 அரசியலுக்கு லாயக்கு இல்லை!

'இந்த காலத்திலும் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறாரே... இப்படி இருந்தால் அரசியலில் பிழைப்பு நடத்த முடியுமா...' என, வட கிழக்கு மாநிலமான மிசோரமின் முதல்வர் ஜோரம்தங்கா பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள்.

ஜோரம் தங்கா, ஆர்ப்பாட்டம், ஆடம்பரமில்லா யதார்த்தமான அரசியல்வாதி. மிசோ தேசிய முன்னணி என்ற கட்சியைச் சேர்ந்தவர். இவருக்கு, மிசோரமில் பேசப்படும் மிசோ மொழி மட்டுமே தெரியும். ஆங்கிலத்தில் பேசினால் ஓரளவு புரிந்து கொள்வார். சமீபத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை பெரும்பாலும் ஹிந்தி மொழியிலேயே இருந்தது. பிரதமருக்கும், பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்களுக்கும் ஹிந்தி நன்றாக தெரியும் என்பதால், பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், ஜோரம்தங்காவுக்கும், வேறு சில மாநிலங்களின் முதல்வர்களுக்கும் ஹிந்தி தெரியாததால், பேந்த பேந்த விழித்தனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், சக அமைச்சர்கள், முதல்வர் ஜோரம் தங்காவிடம், 'உங்களுக்கு ஹிந்தி தெரியாதே... எப்படி சமாளித்தீர்கள்?' எனக் கேட்டனர். அதற்கு அவர், 'சமாளிப்பதா... மற்றவர்கள் பேசுவதை, வேடிக்கை மட்டுமே பார்த்தேன்' என, அப்பாவியாக பேசினார். இதைக் கேட்ட அமைச்சர்கள், 'மற்ற முதல்வராக இருந்தால், ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டி விட்டேன் என, கூறியிருப்பர். இவருக்கு, பொய் பேச தெரியவில்லை. இவர், அரசியலுக்கு லாயக்கு இல்லாத முதல்வராக இருக்கிறார்' என, பரிதாபப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X