புதுடில்லி : 'ராஜ்தானி' சிறப்பு ரயில்களில், கடந்த ஐந்து நாட்களில், 3.5 லட்சம் பயணியரால், 69 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ள தாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, டில்லி உள்ளிட்ட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் சிக்கி தவிக்கின்றனர். தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.அவர்களுக்காக, ராஜ்தானி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி மே, 12 முதல் இயங்க தொடங்கிய சிறப்பு ரயில்களில், நேற்று முன்தினம் வரை, 2 லட்சத்து, 48 ஆயிரத்து, 634 பேர் பயணித்து உள்ளனர். இந்த ரயில்களில் சிறப்பு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், ரயில்வேக்கு, 69 கோடியே, 33 லட்சத்து, 67 ஆயிரத்து, 735 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
மேலும், 21 சிறப்பு ரயில்கள், மே, 27ம் தேதி இயக்கப்பட உள்ளன. மே, 22 முதல், காத்திருப்போர் பட்டியலுக்கான சேவையும் தொடங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ஜூன், 30 வரை, வழக்கமான பயணியர் ரயில் சேவை, முழுமையாக தொடங்கப்பட வாய்ப்பில்லை என, ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்பதிவுக்கு நிபந்தனை :
டில்லியில் இருந்து சிறப்பு ரயிலில், மே, 14ல் பெங்களூரு வந்த, 50 பயணியர், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மறுத்து, ரயில் நிலையத்தில் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டனர். இதனால், 'சொந்த ஊர்களில் தனிமைப்படுத்திக் கொள்ள சம்மதிப்போர் மட்டுமே, டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்' என, ரயில்வே அறிவித்துள்ளது. இணைய வழியாக டிக்கெட்டுக்கு முன் பதிவு செய்யும் போது, 'நான் செல்லும் மாநிலம் வழங்கும் சுகாதார ஆலோசனையை ஏற்றுக் கொள்வதுடன், அதை பின்பற்றுவேன்' என, பயணியர் ஒப்பதல் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE