கிருமிகள் இருக்கும் இடம் அறியாமல் வாழ்க்கை

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement
கிருமிகள்,வாழ்க்கை

டிசம்பர் 19ல் சீனாவின் வூகானில் தொடங்கிய கொரானா நோய்த் தொற்றுக் கிருமியின் பயணம் இன்று உலகம் முழுதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கி மக்களை நிலை குலையச் செய்திருக்கிறது.

நோய்த்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க ஊரடங்கே தற்காலிக தீர்வு என உலகநாடுகளும், உலக சுகாதார நிறுவனமும் கருதியது. நாடுகளும் அப்படியே பின் பற்றின.ஆனால் இன்று இத்தொற்றின் தாக்கம் தொடர்கிறதே தவிர முடிவுக்கு வரும் நிலை இல்லை. எனவே உலக நாடுகள் வேறு கோணத்தில் இப்போது சிந்திக்க தொடங்கி விட்டார்கள். இக்கிருமித் தொற்றினால் ஏற்படும் பாதிப்பை விட இனி மக்கள் பட்டினியால் பாதிப்புக்குள்ளாகும் நிலை வந்து விட வாய்ப்புள்ளது எனக் கருதி அதை தடுக்க வேண்டிய அவசியம் பற்றிய குரல் ஒலிக்க தொடங்கி விட்டது.

இன்னொரு பக்கம் ஊரடங்கில் வீட்டுக்குள்ளேயே அடங்கி கிடந்த மக்களுக்கும் ஒருவித சலிப்பு வந்து விட்டது. நம்மை வெளியே விட்டால் போதும்; பிழைப்பை பார்ப்போம் என்கிற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். இதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்திருக்கின்றன.


திறந்த கதவுகள்எனவே அடைபட்ட கதவுகளை மெல்ல மெல்லத் திறந்து விட முடிவு செய்து விட்டது. அதன் ஒரு பகுதியாகவே சில தொழிற்ச்சாலைகளையும், கடைகளையும், கட்டுமானத் தொழில் களையும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அரசு அனுமதியளித்திருக்கிறது. அரசு அலுவலகங்களும் 50 சத ஊழியர்களுடன் செயல்பட துவங்கி விட்டன. நோய்த்தொற்று தீவிரமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்த சரியான மருந்துகள் இல்லையென்றாலும் கூட மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் திறனால் உயிரிழப்பு சதவிகிதம் குறைவாகவே இந்தியாவில் இருப்பதாக பேசத்தொடங்கி இருக்கிறார்கள்.

இந்தச்சூழலில் தான் தமிழகத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை கூடுதலாக உறுதிசெய்யப் பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருவோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஆனாலும் நிலமை கட்டுக்குள் தான் இருக்கிறது என்கிறது மாநில அரசு. அதே நேரத்தில் இனி வரும் நாட்களில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டாலும் கூட வீட்டிலேயே அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்கலாம்.அரசு மருத்துவர்கள் அவர்களுக்கு தேவையான மருந்தை அளித்து தொடர்ந்து கண்காணித்து நோய்த் தொற்றிலிருந்து மீள வழி காட்டுவார்கள் என்கிறது மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை.


மக்களின் பங்கு என்னஇந்த சூழ்நிலையில் மக்களின் பங்கு என்ன என்று கேள்வி எழுகிறது. ஊரடங்கை முழுவதுமாக தளர்த்தாவிட்டாலும் கூட மக்கள் மூச்சுவிட ஊரடங்கில் அளித்த சில தளர்வுகள் கை கொடுக்கும் என நம்பலாம். ஊரடங்கு தளர்வை நாம் பயன்படுத்திக்கொள்ளலாமே தவிர நோய்த்தொற்று பாதுகாப்பில் இன்னும் மிக கவனத்துடனேயே இருக்க வேண்டும்; கிஞ்சித்தும் அலட்சியம் கூடாது.

ஏனெனில் நாம் செல்லும் இடங்களில், பழகும் பகுதியில் எங்கோ யாருக்கோ கண்ணுக்கு தெரியாத கிருமி இருக்ககூடும்.மதுக்கடைகளின் முன் முட்டி மோதி நான் முந்தி நீ முந்தி என மக்கள் உரசி நிற்பதை காண்கையில் நம் மனதுக்குள் ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது. சாலை போக்குவரத்திலும், நடை பாதைகளிலும், காய்கறி சந்தைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்கிற விழிப்பற்று பொதுமக்கள் இருக்கிறார்கள். இது நோய்த் தொற்றை நாமே வலிய இழுத்துக்கொள்ளும் செயலாகும்.


இளவயதினர் கவனம்சமீப நாட்களில் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோர்களின் பட்டியலை பார்த்தால் நாற்பது வயதுக்கும் கீழான ஆண், பெண்களின் எண்ணிக்கையும் கூட கணிசமாக இருப்பது இளம் வயதினர் இந்நோய்த்தொற்றின் அபாயத்தை உணராமல் அலட்சியமாக இருக்கிறார்களோ என கருதத் தோன்றுகிறது.இளம்வயதினர் எளிதாக இந்நோய்த் தொற்றிலிருந்து மீள வாய்ப்பிருக்கிறது என்றாலும் அவர்களால் முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பரவும் ஆபத்து உள்ளது என்பதை இளையவர்கள் உணர வேண்டும்.

பொதுவெளியில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடைமுறைகளை அவர்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும்.இஸ்ரேல் நாட்டில் அறுபது வயதுக்கு மேற்பட்டோரும், அறுபது வயதுக்கு கீழுள்ளவர்களுக்கும் இடையில் கூட இடைவெளியை பின் பற்றுகிறார்கள் என்கிற செய்தியை கேள்வியுறுகிறோம். அவர்கள் அவ்வளவு விழிப்புணர்வோடு செயல்படுகிறார்கள்.


ருமுன் காப்போம்'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்துாறு போலக் கெடும்'என்கிறது திருக்குறள்.எந்த ஒரு துன்பத்தையும் வருமுன் தடுக்காதவனின் வாழ்க்கை நெருப்பு முன் வைத்த வைக்கோல் போர் போல் எரிந்து நாசமாகிவிடும் என்று வருமுன் காப்பதன் அவசியத்தை உணர்த்துகிறார் திருவள்ளுவர்."நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பொன்மொழி. நோயின் துன்பம் அவ்வளவு கொடுமையானது. நோயற்ற வாழ்க்கையே இன்பமான வாழ்க்கை; உடல் ஆரோக்கியமே நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய பெரும் செல்வம். "நோய்க்கு இடங்கொடேல் " என்கிறார் அவ்வை.

ஆம் எந்தக் காரணத்தைக் கொண்டும் நாம் வலிய சென்று நோய்க்கு இடமளித்து விடக்கூடாது. மக்கள் பாதுகாப்பு பணியிலோ, தொழிற்சாலையிலோ, உணவகங்களிலோ, கடைகளிலோ, சொந்த பணிகளையோ கூட ஆற்றலாம். ஆனால் நாம் அங்கே வழக்கமான சுயசுத்தம் பராமரித்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நோய்த் தொற்று பாதுகாப்பு முறைகளை கவனமாக கடைபிடிக்க வேண்டியது அவசியம். இதில் சிறிது அலட்சியம் காட்டினாலும் நாம் நோய் தொற்றுக்கு ஆளாவோம் என்பதை மறந்து விடக்கூடாது.
நம் தொற்று நம்மோடு நின்று விடப்போவதில்லை. நம் வீட்டில் முதியோர், குழந்தைகளுக்கும் தொற்றி அவர்களின் உயிருக்கே உலை வைத்து விட வாய்ப்பு ஏற்பட்டு விடும்.


உடலை கவனிப்போம்" உடலினை உறுதி செய் " என்றார் பாரதி. உடலினை உறுதி செய்வது எப்படி. தகுந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் சத்தான உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் நம் உடல் நலமோடு இருப்பதுடன் நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் எதிர்ப்பாற்றல் வல்லமையோடும் விளங்கும்.நாம் இன்னும் சிறிது காலத்திற்கு இந் நோய்த்தொற்றுக் கிருமியுடன், இக்கிருமிகள் இருக்குமிடம் அறியாமல் அதனுடன் தான் பயணிக்க வேண்டிய கட்டாயச்சூழல் இருக்கிறது.இது போன்ற ஒரு சூழலில் நாம் செய்ய வேண்டியது...


பொறுமை வேண்டும்மக்கள் கூட்டம் நிறைந்த கடைகளை தவிர்த்து கூட்டமில்லாத சிறு கடைகளில் பொருள்களை வாங்கலாம். முடிந்தளவு தினம் கடைக்குப் போவதை தவிர்த்து வாரத்தேவைக்கு வாங்கிக் கொள்ளலாம். கடையில் வரிசையில் பலர் நிற்க அவர்களை தாண்டி, தாவி வாங்க நினைப்பதை தவிர்த்து பொறுமை காத்து சமூக இடைவெளியுடன் நின்று பொருள்களை வாங்கலாம். எந்த இடமாக இருந்தாலும் முண்டியடித்து நெரிசல் ஏற்படுத்தாமல் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முககவசம் அணிந்து வெளியே செல்வோம்.

பயன்படுத்திய முகக்கவசங்களை கண்ட இடத்தில் எறியாமல் அதை முறையாக குப்பைத் தொட்டியில் போட வேண்டும். பொது இடத்தில் நின்று புகை பிடிக்காதீர். தும்மும் போதும், இருமும் போதும் பாதுகாப்பு நடை முறையை கடைபிடிக்க வேண்டும்.அவசியமே இல்லாத நிலையில் பொதுவெளியில் வருவதை, பயணிப்பதை முற்றிலும் தவிர்க்கலாம்.

வெளியே வரும்போது தேவையற்ற இடங்களில் கைகளை வைப்பது, கைகளை சுத்தம் செய்யாமல் முகத்திற்கு கொண்டு போவதை தவிர்க்க வேண்டும்.எந்த ஒரு நிகழ்வையும் எளிமையாக, கூட்டத்தை தவிர்த்து நடத்தலாம்.இப்படி கொடிய கொரானாத் தொற்றில் துளியளவு கூட அலட்சியம் காட்டாமல் மிகுந்த கவனத்துடன் இருப்போம்.

-நாச்சியார்பட்டி எஸ்.தனசேகரன்

எழுத்தாளர். மதுரை.94433 01383

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X