திருவொற்றியூர்; ஊரடங்கால், வேலையிழந்த சலவை தொழிலாளர்கள் மீள வழி தெரியாமல் தவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் முடங்கியதால், பலர் வேலையிழந்து தவிக்கின்றனர். அந்த வரிசையில், சலவை தொழிலாளர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
திருவொற்றியூர், எண்ணுார், மணலி, மணலி புதுநகர் சுற்றுவட்டாரத்தில், 500க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள், நகரின் பல தெருக்களில், தள்ளுவண்டிகள், தனி சிறு கடைகள் மூலம், துணிகளுக்கு இஸ்திரி போடும் பணி செய்து வந்தனர்.
பொது முடக்கத்தால், வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில், 50 நாட்களாக, கடைகளுக்கு விடுமுறை விட்ட நிலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய சலவை தொழிலாளர்கள், குடும்பத்தை நடத்த முடியாமல், திணறி வருகின்றனர்.
தவிப்பு
வைரஸ் பரவலால் மிரண்டு போயுள்ள சென்னைவாசிகள், குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், தள்ளுவண்டி காய்கறி கடைகள், வீட்டு வேலை செய்பவர்களை, ஊர் நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை.அதுபோல, தள்ளுவண்டி இஸ்திரி கடைகளுக்கும் பெரும்பாலான இடங்களில், ஊர் நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன.
பல வீடுகளில், துணிகளை வாங்கி இஸ்திரி போடும் சலவை தொழிலாளர்கள், துணிகள் மூலம் தொற்று பரவ கூடும் என, அஞ்சுகின்றனர்.ஊடரங்கால், அரசு, தனியார் ஊழியர்கள் வேலைக்கு செல்வதில்லை. திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் ஏதுமில்லை. இதனால், துணிகளுக்கு இஸ்திரி போடுவதில், யாரும் நாட்டம் செலுத்துவதில்லை.இதன் காரணமாக, சலவை தொழிலாளர்கள், ஒரு நாளை கூட கடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு கவனித்து, பதிவு செய்யாத சலவை தொழிலாளர்களுக்கும், நிவாரணம் வழங்க வேண்டும் என. கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE