பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் உட்பட 5 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் உட்பட 5 பேர் பலி

Added : மே 18, 2020
Share

ராயபுரம்; ராயபுரத்தில், கொரோனா பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண், அதிர்ச்சியில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் உட்பட, மேலும் ஐந்து பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை, ராயபுரம்,ராமன் தெருவைச் சேர்ந்த, 44 வயது பெண், டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. தொற்றால் உயிரிழப்புஅதற்காக, வீட்டில் இருந்தபடியே, சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய, நேற்று முன்தினம், சுகாதாரத் துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.கொரோனா சிகிச்சை மையத்தை பார்த்ததும், அதிர்ச்சியில் அங்கேயே மயக்கம் அடைந்துள்ளார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார்.ராயபுரம் மண்டல அதிகாரிகள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். மருத்துவ பரிசோதனை முடிவில், அவர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தது தெரிய வந்தது.கோடம்பாக்கம், தாஸ்புரத்தைச் சேர்ந்த, 72 வயது முதியவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த, 12ல், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:50 மணிக்கு உயிரிழந்தார். அதே போல், அடையாறு மண்டலம், 175வது வார்டு, அடையாறு, கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த, 54 பெண்ணுக்கு, இரு தினங்களுக்கு முன், கொரோனா பாதித்து, அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அதே மண்டலம், 181வது வார்டு, திருவான்மியூரைச் சேர்ந்த, 62 வயது ஆண், கொரோனா பாதித்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இருவரும், சிகிச்சை பலனின்றி பலியாயினர். சென்னை, ராயபுரம், ராமன் தெருவைச் சேர்ந்த, 52 வயது நபர், காய்ச்சல் காரணமாக, கடந்த, 16ல், ஓமந்துாரார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்; நேற்று உயிரிழந்தார். மருத்துவ பரிசோதனையில், கொரோனா தொற்றால் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.துாய்மை பணியாளர்சென்னை, பல்லவன் சாலை, காந்தி நகரைச் சேர்ந்தவர், 43 வயது பெண், புரசைவாக்கம் மாநகராட்சி அலுவலகத்தில், துாய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 15ல், உடல்நலம் பாதிக்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.நேற்று வெளியான மருத்துவ பரிசோதனையில், அவர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தது தெரிந்தது.ராயபுரம் மண்டல சுகாதார அதிகாரிகள், நுங்கம்பாக்கத்தில் உள்ள, மாநகராட்சி சுடுகாட்டில் இறுதி சடங்குகளை, நேற்று மேற்கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X