புதுடில்லி: 'சாலையில் அமர்ந்து பேசி வெளிமாநில தொழிலாளிகளின் நேரத்தை வீணடித்ததற்கு பதில், அவர்களது சூட்கேஸ்களை சுமந்து சென்று ராகுல் உதவியிருக்கலாம்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிண்டல் செய்தார்.
டில்லியில் இருந்து சொந்த மாநிலம் திரும்பிய வெளிமாநிலத் தொழிலாளர்களை, காங்., முன்னாள் தலைவர், ராகுல், நேற்று முன்தினம் சந்தித்தார். சாலையோரங்களில் அமர்ந்து, அவர்களிடம் நலம் விசாரித்தார். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இது குறித்த கேள்விக்கு, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

சாலையில் அமர்ந்து பேசி, அவர்களுடைய நேரத்தை வீணடித்துள்ளார். அதற்கு பதிலாக, அவர்களுடைய சூட்கேஸ்களை சுமந்து சென்று உதவியிருக்கலாம். காங்., ஆளும் மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு, தேவையான உதவி செய்ய, அந்த மாநில அரசுகளை, அவர் கேட்டுக் கொள்ளலாம். இது வெறும் அரசியல் நாடகம் தான்.

இந்த இக்கட்டான நேரத்தில், இதுபோன்ற சில்லரைத்தனமாக விஷயங்களில் ஈடுபடுவதைவிட்டு, பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். காங்., தலைவர், சோனியாவிடம் இதை கோரிக்கையாக வைக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE