பொது செய்தி

இந்தியா

கைகொடுக்குமா சுயசார்பு திட்டம்?

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
கடந்த வாரம், 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஊக்கத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு முக்கிய வார்த்தையைக் குறிப்பிட்டார். 'சுயசார்பு' என்பது தான் அந்தச் சொல்.கொரோனாவில் இருந்து மீண்டு, புதிய இந்தியாவைக் கட்டமைக்க, சுயசார்பு ஒன்று தான் கைகொடுக்கப் போகிறது என்பது அவரது வாதம். இதன் பொருள் என்ன? இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அணுகுமுறைகள்
finance minister, nirmala sitharaman, modi economic package,
சுயசார்புதிட்டம், நிதியமைச்சர்,நிர்மலா, நிர்மலாசீதாராமன்

கடந்த வாரம், 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஊக்கத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு முக்கிய வார்த்தையைக் குறிப்பிட்டார். 'சுயசார்பு' என்பது தான் அந்தச் சொல்.கொரோனாவில் இருந்து மீண்டு, புதிய இந்தியாவைக் கட்டமைக்க, சுயசார்பு ஒன்று தான் கைகொடுக்கப் போகிறது என்பது அவரது வாதம். இதன் பொருள் என்ன? இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அணுகுமுறைகள் என்ன?சுயசார்பு நமக்கு மிகவும் பழக்கப்பட்ட சொல். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் பொருள் தான் மாற்றமடைந்து வந்திருக்கிறது. மகாத்மா காந்தி, சுதேசி பொருளாதாரம் என்று பேசிய போது, அவர் அதை ஒரு பொருளில் பயன்படுத்தினார்.


ஆய்வு

குறிப்பாக, கிராமங்கள் தன்னிறைவு அடைந்தவையாக இருக்க வேண்டும். அதற்கு கிராமங்களிலேயே, உள்ளூர் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்தி, விற்பனையை மேற்கொண்டு, சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்றார்.பின், 1970களில், பிரதமர் இந்திரா காந்தி, இதே சொல்லை வேறு பொருளில் பயன்படுத்தினார். அவரது தந்தையான ஜவஹர்லால் நேருவின் அடியொற்றி வந்தவரான இந்திரா, உணவுத் தானியங்கள், பாதுகாப்பு, தொழில்நுட்ப மேம்பாட்டில் சுயசார்பை வலியுறுத்தினார். அப்போது மிகப்பெரும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்திய பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது.அந்த சமயத்தில், உள்நாட்டிலேயே எண்ணெய் துரப்பணப் பணிகளை மேற்கொள்வதற்குப் பெரும் ஊக்கம் அளித்தார். பல்வேறு அறிவியல் ஆய்வு நிறுவனங்களை நிறுவுவதற்கு கூடுதலான நிதி உதவிகளை அளித்தார். விண்வெளி ஆய்விலும், அணுசக்தி ஆய்விலும் ஆர்வம் காட்டினார். அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் மூலமும், அதன் கண்டுபிடிப்புகளின் மூலமும், இந்தியா சுயசார்பை அடைய முடியும் என்பது இந்திராவின் எண்ணமாக இருந்தது.

தற்போது பிரதமர் மோடி, இதை இன்னொரு பொருளில் பயன்படுத்தியுள்ளார். காலமாற்றத்துக்கு ஏற்ப, இவர் வழங்கும் பொருளும் மாற்றம் அடைந்திருக்கிறது. இன்றைய உலகமே சிறுகிராமமாக சுருங்கிய பிறகு, சுயசார்பு என்பது என்ன? பழைய பொருள் எதுவும் இனிமேல் பொருந்தாது.அதாவது, வெளிநாட்டு முதலீட்டாளர்களும், அவர்களது முதலீடுகளும், தொழில்நுட்பங்களும், அறிவுத் திறனும் நமக்கு நிச்சயம் வேண்டும். அவர்கள் இங்கே தொழில் செய்ய அனுமதிக்கப்படுவர். ஆனால், அவர்கள் உற்பத்தி செய்யும் கருவிகள் மற்றும் வழங்கும் சேவைகளின் ஒவ்வொரு துணைப் பொருளும், உதிரிபாகங்களும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். பல்வேறு கருவிகளை, 'அசெம்பிள்' செய்து தருவதற்கான நிலமாக இந்தியா இருக்கக்கூடாது. இதற்கு, 'தற்பாதுகாப்பு' என்று அர்த்தமா என இன்னொரு கேள்வி எழுந்தது. இல்லை. இது, அமெரிக்கா போன்று கதவுகளை மூடிக்கொள்ளும், 'புரொடெக்ஷனிஸம்' எனும் பாதுகாப்புவாத மனநிலை அல்ல. அப்படி இருக்கவும் முடியாது.


சாத்தியமா?


மாறாக, அனைவரும் இங்கே வரலாம். தொழிலோ, வர்த்தகமோ செய்யலாம். ஆனால், அவை இந்த மண்ணுக்கும், மக்களுக்கும், வளமும் வாழ்வும் சேர்ப்பதாக இருக்க வேண்டும்.இங்கே அறுவடை செய்வதின் பலன்கள் ஏற்றுமதி செய்யப்படலாம். ஆனால், அதன் பயன்களும், லாபங்களும் இந்திய மண்ணையே வந்து சேர வேண்டும். இத்தகைய ஒரு கருத்து, இன்றைய சந்தை பொருளாதார சூழ்நிலையில் சாத்தியமா? பொருளாதார அறிஞர்கள் எல்லாரும், 'சாத்தியமில்லை, இது வெறுங்கனவு' என்றே தெரிவிக்கின்றனர். ஆனால், நாம் இந்த முயற்சியில் ஈடுபட்டு, முட்டி மோதி, நம் தனித்துவத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு விரும்புவது தெரிகிறது.'சுயசார்பு'க்கு வித்திடும் விதமாகவே, நிதி அமைச்சர் தமது திட்டங்களைத் தொடர்ச்சியாக அறிவித்து வருகிறார். இதில் நிதி நிவாரணங்கள், சலுகைகள், மானியங்களை விட, முதலீட்டு வாய்ப்புகளில் உள்ள முட்டுக்கட்டைகளை விலக்கிவிடுதல், கூடுதல் கடன்களைப் பெறுவதற்கான நெறிமுறைகளை மாற்றியமைத்தல், கெட்டித் தட்டிப் போயிருக்கும் பல்வேறு வரையறைகளையும் சட்டங்களையும் தளர்த்துதல் ஆகியவற்றைச் செய்திருக்கிறார்.

அரசாங்கத்துக்கு வரவேண்டிய ஒருசில தொகைகளை விட்டுக்கொடுத்து, மக்கள் கையில் பணப்புழக்கம் பெருகுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துஉள்ளார். எல்லாவற்றுக்கும் மையப்புள்ளியாக, ஜவாப்தாரியாக வங்கிகளையும், மாநில அரசாங்கங்களையும் நியமித்து உள்ளார் நிதி அமைச்சர்.இத்தகைய முயற்சிகளே இங்கே பொருளாதாரச் சக்கரம் சுழலுவதற்குப் போதுமான உத்வேகத்தைக் கொடுத்துவிடும் என்று நிதி அமைச்சர் கருதுவதாகத் தெரிகிறது.ஆனால், விமர்சகர்களும், பொருளாதார அறிஞர்களும் விடுவதாக இல்லை. ஆர்.பி.ஐ., கொடுத்ததையும் எப்படி ஓர் அரசாங்கம், தான் கொடுத்ததாக கணக்கில் காட்ட முடியும்? கடன் கொடுப்பதை எப்படி நிவாரணமாக கருதமுடியும்?

'நிதி ஊக்கத் தொகுப்பு' என்று இந்த பேக்கேஜை எப்படி சொல்ல முடியும்? அமெரிக்கா உட்பட பல நாடுகளும், மக்கள் கையில் போதிய நிதியையும் கொடுத்துவிட்டு, குறு, சிறு தொழில்கள் துவங்கத் தேவைப்படும் கடன் வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறதே. அதைத் தானே நாமும் பின்பற்ற வேண்டும் என்று கேட்கின்றனர். மக்கள் கையில் பணம் இருந்தால் தானே, அவர்கள் துணிந்து போய் பொருட்களையோ, சேவைகளையோ வாங்குவர். டிமாண்டு பெருகுவதற்கு இந்த அரசாங்கம் என்ன செய்துள்ளது என்ற நியாயமான கேள்வி எழுப்பப்படுகிறது.


பேராபத்து

இந்த அரசாங்கத்துக்கு ஒரு பயமும், ஒரு ஜாக்கிரதை உணர்வும் இருப்பதாகவே தெரிகிறது. கடந்த, 2008ல் கொடுக்கப்பட்ட கடன்கள் எப்படி, 2013 முதல் வாராக்கடன்களாக மாறி, வங்கித் துறையையும், இந்தியப் பொருளாதாரத்தையும் நிலைகுலைய வைத்ததோ, அதேபோல் இன்னொரு பேராபத்தை நாமும் ஏற்படுத்திவிடக்கூடாது என்ற பயம் இவர்களிடம் இருக்கிறது.மற்றொன்று, தாராளமாக பணத்தை வாரி வழங்கினால், ஒன்றும் குடிமுழுகி விடாது. நிதிப் பற்றாக்குறை இலக்கை மீறிச் செலவு செய்தாலும், சர்வதேச ரேட்டிங் ஏஜன்சிகள், நம் நாட்டுக்கான தரநிர்ணய அளவு கோல்களை மாற்றாது, கவலைப்பட வேண்டாம் என்று ஒருசில பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்தை, இந்திய அரசாங்கம் ஜாக்கிரதையுடன் பார்க்கிறது.


வாராக்கடன் சுமை

அதை முழுமையாக நம்பத் தயாராக இல்லை. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக ஆகிவிடக் கூடாது என்றும் கருதுகின்றனர்.ஒரே ஒரு விஷயம் மட்டும், நிதி அமைச்சரின் ஐந்து நாள் அறிவிப்புகளில் இருந்து தெரிய வருகிறது. நிதி ஆதாரங்களை, கண்மூடித்தனமாக வாரி வழங்க மத்திய அரசு தயாராக இல்லை.ஒவ்வொரு ரூபாய் செலவும் உரிய நபருக்குப் போய்ச் சேரவேண்டும். அந்த நிதியைக் கொண்டு, அவர் உற்பத்தியில் ஈடுபடுபவராக இருக்க வேண்டும்; பணத்தைத் திருப்பிச் செலுத்தக் கூடியவராக இருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் கழித்து, கையை விரித்துவிட்டு, வாராக்கடன் சுமையை ஏற்றுபவராக இருக்கக் கூடாது. அதற்கு ஏற்ப, பொறுப்புணர்ந்து கடன் பெறுபவராக இருக்க வேண்டும். இதுதான் அடிப்படை.இந்த நோக்கில் சிறிதும் பிழையில்லை. ஜாக்கிரதையுணர்வுடன் ஒவ்வொரு அடியையும், திட்டத்தையும் நிதி அமைச்சர் வழங்கியிருக்கிறார். ஆனால், இதன் நடைமுறை தான் மிகவும் முக்கியமானது. இனி, ஒவ்வொரு வாரமும் இந்தத் திட்டங்கள், களத்தில் எவ்வளவு துாரம் சென்றிருக்கின்றன, பயன் தரத் துவங்கியுள்ளனவா என்பதையும் நிதி அமைச்சர் தெரிவிக்க வேண்டும்.

வங்கிகளையும் மாநில அரசுகளையும் கூட தமது முயற்சிகளைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்க நிதி அமைச்சர் பணிக்க வேண்டும். இன்னொரு அம்சத்தையும் நிதி அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் போன்றோர் வங்கிகளின் வாயிலாக தேவையான நிதி ஆதாரங்களைப் பெற்றுவிட முடியும். அவர்களுக்கு நிதி ஊக்குவிப்புகள் தேவைப்படாது.ஆனால், தொழில்கள் நடைபெறத் துவங்கி, மீண்டும் வேலைகள் கிடைத்து, அன்றாட கூலியைச் சம்பாதிப்பதற்கு, பல லட்சம் பணியாளர்கள் இன்னும் ஒருசில மாதங்களேனும் காத்திருக்க நேரும்.இத்தகைய அன்றாடங் காய்ச்சிகளுக்கு, கொரோனா ஊரடங்கு துவங்கியபோது, 1.70 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பில் தான் நேரடிப் பணப்பட்டுவாடா இருந்தது. அதில் எவ்வளவு தொகை அவர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது என்பதையும் ஐந்தாம் நாளன்று தெளிவாகத் தெரிவித்தார் நிதி அமைச்சர்.

உண்மையில் இது போதுமா, அடுத்த வேலை, அடுத்த வாழ்வு கிடைக்கும் வரை அவர்களை எப்படி காப்பாற்றுவது என்பதையும் நிதி அமைச்சர் அவ்வப்போது கவனிக்க வேண்டும்.திட்டங்கள் எல்லாம் சமுதாயத்துக்கு வழங்கப்படும் பாயசம் என்றால், அதில் இனிப்பு என்பது ஏழை எளியவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும் நிதி உதவி தான். இனிப்பு இல்லாமல் பாயசம் சுவைக்கப் போவதில்லை. அவ்வப்போது தேவைப்படும் இனிப்பை சேர்க்க, நிதி அமைச்சர் முயற்சி செய்ய வேண்டும். இல்லை யெனில், அது வெறுங்கஞ்சியாக போய்விட வாய்ப்புண்டு.


latest tamil news


ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
pattamvenkatesh@gmail.com
9841053881

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
18-மே-202019:02:24 IST Report Abuse
elakkumanan ரெண்டு நாளைக்கு மழை பெருசா பெஞ்சாலே ஓசியா ஆயிரம் ரூவாய் (யாரோ ஒரு யோக்கியன் கட்டுன வரி காசை ) இலவசமா கொடுத்து
Rate this:
Cancel
Senthil kumar - coimbatore,இந்தியா
18-மே-202018:55:54 IST Report Abuse
Senthil kumar ஏற்கனவே நலிவடைந்த நிலையில் இருக்கும் தொழில்கள் மற்றும் லாக் டவுண் காலத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களை காப்பாற்ற சிறு, குறு நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களுக்கான வங்கி வட்டி தள்ளுபடிதான் நேரடியான நிவாரணமாக கருதமுடியும். மேலும் முதலீட்டாளர்களுக்கு நிதி ஆதாரங்களை கொடுப்பதன் மூலம் அந்த நிறுவனங்களை தொடர்ந்து உயிர்ப்புடன் செயல்படுத்தமுடியும் . சிறு, குறு நிறுவனங்கள்தான் உள்நாட்டு வேலைவாய்ப்பில் முதுகெலும்பு ஆகவே உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இவற்றை மேம்படுத்துவதன் மூலம் நிதி சக்கரம் சீராக சுழன்று அரசுக்கும் வரி வருமானத்தை ஈட்டித்தரும். இத்தருணம் ஒரு அரசுக்கு இக்கட்டான மற்றும் சவாலான சூழ்நிலைதான் அதை மறுப்பதற்கில்லை ஆனால் நாட்டு மக்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கருத்தில்கொண்டு ஒரு சில முடிவுகளை அரசுகள் தைரியமாக திறமையாக எடுக்கவேண்டும். தாமதமாக கிடைத்த நீதி எவ்வாறு பயனற்றுப்போகுமோ, அதேபோல் தாமதமாக கிடைக்கும் நிதியும் பயனற்றுப்போகும். எனவே நிதி உதவிகள் சிந்தாமல் சிதறாமல் உரியவர்களிடம் சென்றுசேர போர்க்கால நடவடிக்கைகள் இக்கணம் நாட்டுக்கு தேவை.
Rate this:
Cancel
18-மே-202016:03:10 IST Report Abuse
D PERUMAL Good start but we need to look at the end with required result. Be proud and support to the government.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X