ராமநாயக்கன் ஏரியில் தண்ணீர் விடும் திட்டம் நிறுத்தம்: எம்.பி., நேரில் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாயக்கன் ஏரியில் தண்ணீர் விடும் திட்டம் நிறுத்தம்: எம்.பி., நேரில் ஆய்வு

Added : மே 18, 2020
Share
ஓசூர்: ஓசூர், ராமநாயக்கன் ஏரியில், கெலவரப்பள்ளி அணை நீரை நிரப்பும் வகையில், 50 லட்சம் ரூபாய் செலவு செய்தும், தண்ணீர் வராமல் நிறுத்தப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி எம்.பி., செல்லகுமார் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.ஓசூர் நகரின், முக்கிய நீர் ஆதாரமான ராமநாயக்கன் ஏரியின் நீர்வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக ஏரி நீரின்றி வறண்டதோடு, நகரின் நிலத்தடி

ஓசூர்: ஓசூர், ராமநாயக்கன் ஏரியில், கெலவரப்பள்ளி அணை நீரை நிரப்பும் வகையில், 50 லட்சம் ரூபாய் செலவு செய்தும், தண்ணீர் வராமல் நிறுத்தப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி எம்.பி., செல்லகுமார் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ஓசூர் நகரின், முக்கிய நீர் ஆதாரமான ராமநாயக்கன் ஏரியின் நீர்வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக ஏரி நீரின்றி வறண்டதோடு, நகரின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையிலிருந்து, இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர கோரிக்கை எழுந்ததால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 24.50 லட்சம் ரூபாயும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், 25.50 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு பணிகள் துவங்கின. ராமநாயக்கன் ஏரி வரை குழாய் பதிக்கப்பட்டு கடந்த, 2017 நவ.,10ல், அப்போதைய அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, கலெக்டர் கதிரவன் ஆகியோர், ஏரிக்கு நீரை திறந்து விட்டனர். ஒரு மணி நேரத்துக்கு, இரண்டு லட்சம் லிட்டர் வீதம், தினமும், 25 லட்சம் லிட்டர் தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டு, அதற்கு ஆகும் செலவை, 1,000 லிட்டருக்கு மூன்று ரூபாய் வீதம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, மாநகராட்சி நிர்வாகம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மின் கட்டணம் போன்ற பல்வேறு செலவுகளை மேற்கொள்ள முடியாது எனக்கூறி, அடுத்த நாளே தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதையறிந்த, கிருஷ்ணகிரி எம்.பி., செல்லகுமார், நேற்று காலை ராமநாயக்கன் ஏரியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ''ஏரிக்கு தண்ணீர் விடுவது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை, ஐ.என்.டி.யு.சி., செலுத்த தயாராக இருப்பதால், உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்,'' என்றார். அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X