கொல்லிமலை மிளகு தொழிலாளர் 400 பேர் சொந்த ஊருக்கு பஸ்சில் அனுப்பி வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொல்லிமலை மிளகு தொழிலாளர் 400 பேர் சொந்த ஊருக்கு பஸ்சில் அனுப்பி வைப்பு

Added : மே 18, 2020
Share

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம், 400 தொழிலாளர்கள், கர்நாடகா மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் மிளகு பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா தொற்றின் காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளதால், அவர்கள் அனைவரும் கர்நாடக மாநில அரசு பஸ்கள் மூலம், கடந்த, 13ல், நாமக்கல் மாவட்டம் வந்தடைந்தனர். அவர்களில், 100 பேர் கொல்லிமலை அரசு மாதிரிப்பள்ளியிலும், 150 பேர், சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 150 பேர் சேந்தமங்கலம் பெரியார் பல்கலை உறுப்புக் கல்லூரியிலும் தங்க வைத்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, உணவு மற்றும் சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. சேந்தமங்கலம் பெரியார் பல்கலை உறுப்பு கல்லூரியில், தங்க வைக்கப்பட்டிருந்த, 150 பேருக்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பை, கலெக்டர் மெகராஜ் வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது: கொரோனா ஏற்படாமல் தடுக்க, அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கடைகளுக்கும், பிற இடங்களுக்கும் செல்லும் போது, சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். நீங்கள் அனைவரும் வீடுகளுக்கு சென்ற பின், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தை சேர்ந்த வயதானவர்கள், குழந்தைகளிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சேந்தமங்கலம் பெரியார் பல்கலை உறுப்பு கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்த, 150 பேர், நேற்று பஸ் மூலம், அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக, சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த, 150 பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு, பஸ்கள் மூலம், கொல்லிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எம்.எல்.ஏ., சந்திரசேகரன், ஆர்.டி.ஓ., கோட்டைக்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X