புயலால், வானத்தில் மேகமூட்டம் சூழ்ந்து, இதமான காற்று வீசிக்கொண்டிருந்த மாலை வேளையில், சித்ராவின் வீட்டு மாடியில், மித்ராவும் சேர்ந்து கொண்டு அரட்டையை ஆரம்பித்தனர்.
''நிவாரணம் கொடுக்கறதுலயும், கோஷ்டி சண்டை தீரவே மாட்டேங்குதாம்,'' மித்ரா ஆரம்பித்தாள்.
''என்னப்பா சொல்றே, கொரோனா நிவாரணத்திலயா?''்''ஆமாங்க்கா... கார்ப்ரேஷன் தேர்தல் வருங்கிற எதிர்பார்ப்புலதான், சிட்டிக்குள், ஆளுங்கட்சி சைடில், மாவட்டமும், 'சவுத்'தும், ஆளுக்கொரு பக்கம் போட்டி போட்டுட்டு, நிவாரணம் கொடுத்துட்டு இருக்காங்க''
''56வது வார்டில், மாவட்ட செயலாளர் அணி, நிவாரணம் கொடுக்க திட்டம் போட்டிருந்தாங்க. இதை தெரிஞ்சுகிட்ட 'சவுத்' கோஷ்டியில இருக்கற 'மாஜி' கவுன்சிலர் வகையறா, 'அழைப்பே இல்லை'னு, சத்தம் போட்டு பிரச்னை பண்ணிட்டாங்க,''
''அதுமட்டுமில்ல, எல்லா மக்கள்கிட்டயும் நிவாரணம் தர்றோம்னு, சொல்லிடறாங்க. கூட்டம் அதிகம் வந்ததால, அனைவருக்கும் தர முடியாம, அப்புறம்னு, ஆளுங்கட்சி நிர்வாகிகள் 'எஸ்கேப்' ஆயிடறாங்க,'' விளக்கினாள் மித்ரா.''மக்களை ஏமாத்தறதே இவங்களுக்கு வேலையா போச்சு மித்து,'' என்ற சித்ரா, ''வாட்ஸ் ஆப்', 'பேஸ்புக்', 'டிவிட்டர்'னு, சமூக வலைதளத்துலயே அதிகாரி ஒருத்தர் அதிக நேரத்த செலவிடறாருனு, அரசு ஊழியர்களும் நொந்து போயிட்டாங்களாம்,''''இத தெரிஞ்சுகிட்ட, மற்றவர்கள், ரொம்ப ஜாலியா இருக்காங்களாம்டி,''
''இப்ப இல்ல... எப்பவும் அவங்க அப்டித்தான் இருக்காங்க. அக்கா, பொறுத்து பார்த்த பா.ஜ., நிர்வாகிகள் களமிறங்கிட்டாங்களாம்,''''எதுக்காக...?''''பிரதமர் 'கரீம் கல்யாண்' திட்டத்தில், மூணு மாசத்துக்கு, ஒவ்வொருத்தருக்கும், ஐந்து கிலோ அரிசி தர்றாங்க. ஆனா, ரேஷன் கடையில யாரும் சொல்லவே இல்ல. 'இதையெல்லாம் பார்த்த பா.ஜ., நிர்வாகிகள், மோடி படத்துடன், மத்திய அரசு என்னென்ன சலுகை கொடுக்குதுங்கற விவரத்தோட கடையில ஒட்டிட்டாங்க. அதப்படிச்சுட்டு, மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாம, ரேஷன் பணியாளர் திக்குமுக்காடறாங்களாம்,''
"ஆமாமா, இவங்க சொல்லலைன்னா, அப்படியே மறச்சுடுவாங்க. மித்து, பல்லடத்தில் 'சரக்கு' ஆறாட்டம் பாயுதாம். தெரியுமா?''"என்னக்கா... சொல்றீங்க. கோர்ட் உத்தரவுக்கு அப்புறம் இப்பதான் திறந்திருக்காங்க. எந்த கடையிலும் கூட்டமே இல்லீங்கறாங்க. அப்புறம் எப்படி? புரியமாதிரி சொல்லுங்க்கா...''"அங்குள்ள, மகாலட்சுமி நகரில், நடுராத்திரியிலும் 'சரக்கு' விற்பனை ஜோரா நடக்குது. இதைப்பார்த்துட்டு, ஒருத்தர், மதுவிலக்கு போலீசுக்கு தகவல் சொல்லிருக்காரு,''''நல்லதுதானே செஞ்சிருக்கார்..''
"அட... முழுசையும் கேட்டுட்டு சொல்லுடி. புகார் சொன்ன அடுத்த அஞ்சாவது நிமிஷம், சரக்கு விக்கிற ஆள்கிட்ட இருந்து, போன் வந்துச்சாம். 'ஏன் தம்பி, எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு, கேட்டாங்களாம்"
"அவரும், நான் சொல்லலீங்க'னு பயந்துட்டு, 'டபக்' போனை 'கட்' பண்ணிட்டாராம். இப்படி இருந்தா, யார்தான் புகார் பண்ணுவாங்க சொல்லு. இந்த மாதிரி 'கறுப்பு' ஆடுகளை, அந்த எல்லை 'கருப்பசாமி'தான் காப்பாத்தணும்,''''சூரிய கட்சியிலும், நிவாரணம் பொருள் கொடுப்பதில் பிரச்னையாம்,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
''அரசியல்ல, இதெல்லாம் சாதாரணமப்பா...'' கவுண்டமணி பாணியில் சொன்னாள் சித்ரா.அதைக்கேட்டு சிரித்த மித்ரா, ''நல்லா, காமெடி பண்றீங்கக்கா. காளைக்கு பெயர் போன ஊரில் உள்ள சூரிய கட்சி மாஜி' தன்னோட ஆதரவாளர் ஒருவர், கொரோனா நிவாரணம் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு போயிருக்கார். அப்போ, ஒன்றிய செயலாளர் பொறுப்பை மாத்தி சொல்லியிருக்காரு,''
''இதனால, கோபமான அவர், 'எப்ப பார்த்தாலும், என்னோட பொறுப்பை மாத்தியே சொல்றீங்க. இனிமே என் பேரையே சொல்ல வேண்டாங்க'னு சொன்னாராம். பக்கத்திலிருந்த மத்த 'உபிஸ்'அவரை சமாதானம் செஞ்சாங்களாம்,''
''மித்து, அதே ஊருல, பஸ் ஸ்டாண்டில், காய்கறி கடைகளை அதிகப்படுத்தியிருக்காங்க. அந்த
கடைகளுக்கு, ஆளும்கட்சியை சேர்ந்த 'பழ'ம்பெரும் நிர்வாகி ஒருத்தர் ஒரு கடைக்கு 200 வீதம், தினமும் வசூல் பண்ணிட்டு இருக்காரு,'' என்றாள் சித்ரா.''இதை, நகராட்சி அதிகாரி கேட்கமாட்டாரா?''''அதெப்படி, அவருக்கு பங்கு போகுதில்லே''
''அக்கா.. இதே மாதிரி, நம்ம சிட்டியிலுள்ள பல மதுக்கடைகளில், ராத்திரி, 'பார்' நடக்குதாம். கடைய மூடுற நேரத்தில், மூனு, நாலு பெட்டி 'சரக்கு' வாங்கி வச்சிட்டு, அதிக விலைக்கு வித்துட்டு, 'பாரும்' ஓட்றாங்களாம்''''ஏன், போலீசுக்கு தெரியாதா?''
''அவங்களை 'கவனிச்சிட்டு'தான் இந்த வேலை நடக்குதாம்,'' என்ற மித்ரா, ''அக்கா.. மழை வர்ற மாதிரி இருக்கு. வாங்க, கீழே போயிடலாம்,'' என எழுந்தாள். அதற்குள் மழைத்துளி விழ ஆரம்பித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE