சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கல்வித்துறை கவனத்திற்கு...

Added : மே 19, 2020
Share
Advertisement

கல்வித்துறை கவனத்திற்கு...

ஏ.சி.ராஜன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விஷயங்களில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒன்று.நீண்ட ஆலோசனைக்குப் பின், ஜூன், 15 முதல், 10ம் வகுப்பு தேர்வை நடத்த, தமிழக அரசு முடிவு செய்தது, வரவேற்கத்தக்கது. இதற்கும், பல்வேறு வகையில் எதிர்ப்பு கிளம்பினாலும், தேர்வு நடத்துவதில், அரசு உறுதியாக உள்ளது.அரசு, இன்னொரு விஷயத்தையும், கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, கொரோனா காரணமாக, அந்தந்த பள்ளிகளையே, தேர்வு மையமாக பயன்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது; இது, சில முறைகேடுகள் நடக்க, வழி வகுக்கும்.தங்களிடம் படித்த, மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க, பள்ளி நிர்வாகம் திட்டமிட்டு, முறைகேடுகளில் ஈடுபட, வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதன் வழியாக, பள்ளியின் செல்வாக்கு உயர்ந்து, வருவாயும் உயரும் அல்லவா!'நம் ஆசிரியர்கள் கண்காணிப்பில் இருப்பர். அவர்களே, நமக்கு விடையை சொல்லித் தருவர்; 'பிட்' அடித்தால், கண்டுக்கொள்ள மாட்டார்கள்' என்ற, தவறான மன தைரியம், மாணவர்களுக்கு உருவாகும். ஆசிரியரும், 'எப்படியாவது, நம் மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்' என, எந்த காரியத்திலும் இறங்குவர்.எனவே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை, மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே, எழுத அனுமதித்தாலும், மேற்பார்வையாளர் பணிக்கு, பிற பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் மட்டுமே, பொதுத் தேர்வு நேர்மையாக நடக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில், அனைவரையும், 'பாஸ்' செய்து விடலாம்.


என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?ஏ.எஸ்.நெல்லையப்பன், சென்னையிலிருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆஸ்பத்திரி ஜோக் ஒன்று. அறுவை சிகிச்சை அரங்கில், நோயாளி மற்றும் இரு டாக்டர்கள் உள்ளனர். ஒரு டாக்டர், 'பயப்படாதீங்க... சின்ன ஆப்பரேஷன் தான்' என்கிறார். நோயாளி புன்முறுவலோடு, 'எனக்கு பயம் இல்லை டாக்டர்' என்றார். அதற்கு அந்த டாக்டர், 'நான், உங்ககிட்ட சொல்லலை. இந்த டாக்டருக்கு... இவர் தான், உங்களுக்கு ஆப்பரேஷன் செய்யப் போறார்' என்றதும், நோயாளி ஓட்டம் பிடித்தார்.இன்று, நம் நிலைமை அப்படித் தான் இருக்கு. 'நமக்கெல்லாம், 'கொரோனா' நோய்வராது... பயப்படாதீர்' என, யாரிடமும் சொல்ல முடிவதில்லை; ஏனெனில், சொல்கிறவருக்கும், அந்நோய் தொற்று இருக்கலாம்.வெளிநாடு சென்று வந்தவர்; மதக்கூட்டத்தில் பங்கேற்க, டில்லி சென்றவர்; கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறி வாங்கியவர் என, பலருக்கும் நோய் தொற்று பரவியிருக்கிறது.
இந்த கொரோனா, ஏழை, பணக்காரன்; இளைஞர், முதியோர் என, எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை; அனைவரையும், ஒரு கை பார்க்கிறது.இந்த, 2020ம் ஆண்டு விடியும் போது, 'ஹாப்பி நியூ இயர்' சொன்னோமே... அன்றிலிருந்து, நம் சந்தோஷம் போய் விட்டது.புத்தாண்டு பிறந்ததும், எத்தனை ஜோதிடர்கள், ஆருடம் கூறினர்... ஒருவராவது, 'உலகம் முழுதும், வைரஸ் கிருமி பரவும்; அனைவரும் வீட்டிக்குள்ளேயே முடங்கி கிடப்பீர்கள்' என்றனரா?இந்த கொரோனாவிற்கு, ஒரு மருந்து கண்டுபிடிக்க மாட்டார்களா என, அனைவரும் எதிர்பார்த்துள்ளோம். அலோபதி, ஆயுர்வேதம், சித்த வைத்தியம் என, 'எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என, குழம்பித் திரிகிறோம்.அரசு, நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் தளர்வு செய்து, 'வைரசுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள்' என, மக்களுக்கு ஆறுதல் சொல்லத் துவங்கிவிட்டது.எங்கும் செல்ல முடியவில்லை; எதுவும் செய்ய முடியவில்லை... வீட்டிற்குள்ளேயே முடங்கி நொந்து கிடக்கிறோம். யாரையாவது கட்டிப் பிடித்து, அழ வேண்டும் போல இருக்கிறது; ஆனால், இந்த சமூக இடைவெளி அதற்கும் வாய்ப்பு தரவில்லை.
என்று தணியும், இந்த சுதந்திர தாகம்?யாராவது சொல்லுங்களேன்!


அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்!எஸ்.தனசேகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தீ வைத்து கொல்லப்பட்ட மாணவியின் மரண வாக்குமூலத்தின், 'வீடியோ' சமூகவலைதளங்களில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை குற்றவாளிகள், சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில், மாற்றுக் கருத்தில்லை.ஆனால், இந்த அதிகாரிகள் ஏன் இப்படி பொறுப்பற்று செயல்படுகின்றனர் என, தெரியவில்லை. மாணவியின் மரண வாக்குமூலத்தை பெற்றவர், சாதாரண பொறுப்பில் இருப்பவராக இருக்க முடியாது; அதை, வீடியோ பதிவு செய்தவரும், பொறுப்பற்றவராக இருக்க முடியாது.அதிகாரிகள் அளவிலும், வழக்கிலும் முக்கியமான சாட்சியாக மட்டுமே இருக்க வேண்டிய, அந்த காணொளியை, சமூக வலைத்தளத்தில், அனைவரும் சாதாரணமாக பரப்பி வருகின்றனர்.இதைப் போல, விருதுநகர் கலெக்டருக்கும், ராஜபாளையம் வட்டாச்சியருக்கும் இடையே சென்ற, அலுவக கடிதத்தின் நகல் ஒன்றும், சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அது, 'கொரோனா'வால் பாதிக்கப்பட்டவர் பற்றிய, அனைத்து
விபரங்கள் அடங்கிய கடிதம்.குற்றம் மற்றும் அரசு தொடர்பான முக்கிய ஆவணங்கள், பொதுவெளிக்கு வருவதால், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கப்படும். தேவையற்ற பரபரப்பையும், சட்டம் - ஒழுங்கு பாதிப்பையும் ஏற்படுத்தும். அவ்வளவு ஏன், நீதிமன்ற வழக்கில், குற்றவாளிக்கு ஆதரவாக கூட மாறலாம்.எனவே, குற்றம் மற்றும் அரசு தொடர்பான முக்கிய ஆவணங்களை, சமூகவலைதளங்களில் வெளியிடுவோர், யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X