சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, இரு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜூன், 1க்கு பதிலாக, அதே மாதம், 15ம் தேதி தேர்வு துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 24ல் முடிந்தது. கொரோனா பரவலை தடுக்க, அன்றைய தினம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அன்று நடந்த பாடத் தேர்வில், 37 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை.
அறிவிப்பு
அதேபோல, பிளஸ் 1க்கு பெரும்பாலான பாடங்களுக்கு, மார்ச், 24க்கு முன், தேர்வுகள் முடிந்து விட்டன. மார்ச், 26ல் நடக்கவிருந்த, ஒரு பாடத்துக்கான தேர்வு மட்டும், ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டது. மேலும், 10ம் வகுப்புக்கு, மார்ச், 27ம் தேதி துவங்கவிருந்த, அனைத்து தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன.

இந்நிலையில், விடுபட்ட மற்றும் தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும், ஜூனில் நடத்தப்படும் என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், கடந்த வாரம் அறிவித்தார். ஜூன், 1ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கும் என்றும் கூறினார்.இதற்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது.
கொரோனா பரவல் குறையாததால், வரும், 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன், 1ம் தேதி தேர்வை நடத்துவது சாத்தியமா என, கேள்வி எழுப்பப்பட்டது.
சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நகர்ப்புற மாணவர்கள், தேர்வுக்காக ஊர் திரும்ப வேண்டியிருக்கும். அதனால், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில், தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்தது. இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
ஆலோசனை
இதையடுத்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று முன்தினம், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின், முதல்வர் இ.பி.எஸ்., உடனும் ஆலோசித்தார்.
அதனடிப்படையில், ஜூன், 1ம் தேதி துவங்கவிருந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இரு வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டு, ஜூன், 15ம் தேதி துவங்கும் என, நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதிய தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது.மார்ச், 26ல் நடத்தாமல் தள்ளி வைக்கப்பட்ட, பிளஸ் 1 மாணவர்களுக்கான, வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் தேர்வுகள், ஜூன், 16ம் தேதி நடக்கும்.மார்ச், 24ம் தேதி, பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காத, 37 ஆயிரம் மாணவர்களுக்கு, ஜூன், 18ல் தேர்வு நடத்தப்படும்.அனைத்து தேர்வுகளும், காலையில், மூன்று மணி நேரம் நடக்கும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஜூலை முதல் வகுப்பு:தனியார் பள்ளிகள் மனு
'ஜூலையில், பள்ளிகளில் வகுப்பு துவங்க அனுமதிக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மெட்ரிக், மேல்நிலை பள்ளிகள் சங்கங்களின் சார்பில், பள்ளி கல்வி கமிஷனருக்கு அளிக்கப்பட்டுள்ள மனு:தமிழகம் முழுவதும், பள்ளிகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்து, ஜூலையில் வகுப்புகள் துவங்க அனுமதிக்க வேண்டும். அதற்கு முன், ஜூன், 15 முதல், 30க்குள், புத்தகம், நோட்டு வழங்குவது, கல்வி கட்டணம் வசூலிப்பது போன்ற பணிகளுக்கு அனுமதிக்க வேண்டும்.
கொரோனா நோய் தடுப்பு விதிகளை பின்பற்ற, பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.
மாணவர்கள் முகக் கவசம், கையுறை அணிந்து வரலாம். பள்ளிகளில், 'சானிடைசர்' தரப்பட்டு, அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். பள்ளியில் நுழைவதற்கு முன், கால்களை கழுவி விட்டு வரவும், ஏற்பாடு செய்வோம்.சமூக இடைவெளி பின்பற்றப்படும். ஜூலையில் இருந்து, தினசரி வகுப்புகள் நடத்த அனுமதிக்கலாம். கொரோனா தாக்கம் இருந்தால், மாணவர்கள் சுழற்சி முறையில், பள்ளிக்கு வர நடவடிக்கை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்க, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE