ஜூன் 7 முதல் ஆம்னி பஸ்கள் இயக்கமா? முன்பதிவு துவங்கியதால் குழப்பம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜூன் 7 முதல் ஆம்னி பஸ்கள் இயக்கமா? முன்பதிவு துவங்கியதால் குழப்பம்

Added : மே 19, 2020
Share

சென்னை : தமிழகத்தில், வரும் 31ம் தேதி வரை, நான்காம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த மாதம், 7ம் தேதியில் இருந்து, ஆம்னி பஸ்களுக்கான ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு, மும்மடங்கு கட்டணத்துடன் துவங்கி உள்ளது. இதனால், பயணியர் குழப்பம் அடைந்துள்ளனர். இது குறித்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் ஆம்னி பஸ்களை இயக்குவது குறித்து, இதுவரை அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தற்போது, தமிழக அரசு ஊழியர்களுக்காக இயக்கப்படும் அரசு பஸ்களில், 25 பேர் மட்டுமே, ஏற்றிச் செல்லப்படுகின்றனர். ஆனால், ஆம்னி பஸ்களில், 40 பேர் பயணிப்பதற்கான வரி செலுத்தப்படுகிறது.

அதனால், 25 பயணியரை, ஏற்கனவே உள்ள கட்டணத்தில் ஏற்றிச் சென்றால், பெரும் நஷ்டம் ஏற்படும்.எனவே, 20 பயணியருக்கான வரியை மட்டும், அரசு வசூலிக்க வேண்டும். பயணியரை ஏற்றிச் செல்வது குறித்து, தெளிவான வழிமுறைகளை அரசு அறிவிக்க வேண்டும் என, போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் கமிஷனரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை. எனவே தற்போது, ஆம்னி பஸ்களை இயக்குவது குறித்து, எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

'ரெட் பஸ்' போன்ற, ஆன்லைன் டிக்கெட் விற்பனையாளர்கள், நாடு முழுவதற்குமான சேவையை செய்து வருகின்றனர். தற்போது, கர்நாடகாவில் பஸ்கள் இயக்கப்படுவதால், அதற்காக முன்பதிவு துவங்கி இருக்கும். அதன் தொடர்ச்சியாக, தமிழக பஸ்கள் குறித்த தகவல்களும், இணையத்தில் வெளியாகி இருக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X