பராமரிப்பு இல்லாத கால்வாய்கள் புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பு இல்லாத கால்வாய்கள் புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Added : மே 19, 2020
Share

உடுமலை:பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் செல்லும், கிளைக்கால்வாய்களை, குறித்த நேரத்தில், பொதுப்பணித்துறையினர் புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட, 95 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து ஆக., மாதம் வழக்கமாக தண்ணீர் திறக்கப்படும்.அணையிலிருந்து பிரதானக்கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர், கிளை கால்வாய்கள் மூலம் விளைநிலங்களுக்கு பிரித்தளிக்கப்படுகிறது. இத்தகைய கிளை கால்வாய்கள் பல போதிய பராமரிப்பு இல்லாமல் பரிதாப நிலையில் உள்ளன.இதனால், மண்டல பாசனத்தின் போது, தண்ணீர் விரயமாகி, விவசாயிகளுக்கான நீர் நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படுகிறது. ஒவ்வொரு மண்டல பாசனத்துக்கும் இரண்டு ஆண்டுகள் வரை இடைவெளி ஏற்படுவதால், கிளை வாய்க்கால்கள் கரைகள் சேதப்படுத்துதல், ஷட்டர்கள் மாயமாவது உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளன.திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு சில நாட்கள் முன்பு, அவசர கதியில், கிளை வாய்க்கால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதால், முழுமையான பலன் கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இரண்டாம் மண்டல பாசனத்தில், உடுமலை பகுதியில் புதுப்பாளையம் கிளை வாய்க்கால் மூலம், 7,210 ஏக்கரும், உடுமலை கால்வாய் மூலம், 14 ஆயிரத்து 622 ஏக்கரும், கோமங்கலம் கிளை வாய்க்காலில், 1,534 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.14 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக பாசன வசதி பெறும் உடுமலை கால்வாய் பல இடங்களில் பராமரிப்பு இல்லாமல் பரிதாப நிலையில் உள்ளது. புதுப்பாளையம் மற்றும் கோமங்கலம் கிளை வாய்க்கால்களும் இதே நிலையில் தான் உள்ளன.எனவே, மண்டல பாசனம் துவங்கும் முன், கிளை வாய்க்கால்களை புதுப்பித்து, தேங்கியுள்ள கழிவுகளை பொதுப்பணித்துறையினர் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X