சென்னை : 'மக்கள் பக்கம் நிற்கும், அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக, பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற, தி.மு.க., துணை நிற்கும்' என, அக்கட்சியின் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:கொரோனா ஊரடங்கால், அச்சு ஊடகங்களான நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள், கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.இதுகுறித்து, பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை, என் கவனத்திற்கு கொண்டு வந்து, அச்சு ஊடகங்கள் வழக்கம் போல, மக்களின் மக்களின் குரலாக செயல்படுவதற்கு, தி.மு.க., துணை நிற்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த வேண்டுகோளை நேரில் தெரிவிப்பதற்காக, மூத்த பத்திரிகையாளர்களான, 'தினமலர்' இல.ஆதிமூலம், 'இந்து' என்.ராம், 'தினகரன்' ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் என்னை சந்தித்து, கோரிக்கை கடிதம் அளித்தனர். அதில், அவர்கள் மூவருடன், 'தினத்தந்தி' பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்', மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர்.மக்களுக்கு, உண்மை செய்திகளை, நடுநிலையோடு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள, அச்சு ஊடகங்களான பத்திரிகைகளின் தேவை மிகவும் அவசியம். அவை நெருக்கடிக்கு உள்ளாவதில் இருந்து மீளும் வகையில், மத்திய அரசு, பத்திரிகை அச்சுக்காகிதம் மீதான வரியை குறைக்க வேண்டும்.
அரசு விளம்பரங்கள் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவை தொகையை உடனே, பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும். காலத்தின் தேவை கருதி, அரசு விளம்பர கட்டணத்தை, 100 சதவீதம் அளவிற்கு, உயர்த்தி வழங்க வேண்டும். இவைதான் பத்திரிகை துறையின் முக்கியமான கோரிக்கைகள்.பிரதமர் மோடியின் முன் வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கைகள் நிறைவேற்றிட, தி.மு.க., துணை நிற்கும் என்ற உறுதியை, அவர்களிடம் வழங்கினேன்.கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 'ஒன்றிணைவோம் வா' திட்டம் வாயிலாக, தி.மு.க., செய்துள்ள, செய்து வரும் பணிகளையும் எடுத்துரைத்தேன்.'
மக்கள் பக்கம் நிற்கும், அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, தி.மு.க., - எம்.பி.,க் கள் நிச்சயம் துணை நிற்பர்; பிரதமரிடம் இதை வலியுறுத்துவர்' என்ற உறுதியையும் வழங்கினேன். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
பத்திரிகைகளை பாதுகாக்க வேண்டும்!
பிரதமருக்கு வைகோ கோரிக்கை கடிதம் 'பத்திரிகை துறையை பாதுகாக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பத்திரிகை உரிமையாளர்கள், 'இந்து' என்.ராம், 'தினமலர்' எல்.ஆதிமூலம், 'தினகரன்' ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் என்னை சந்தித்து, தற்போது, பத்திரிகை துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை விவரித்தனர்.
'தினத்தந்தி' உரிமையாளர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் சார்பில், மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோர் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தையும் வழங்கினர். அந்த கடிதத்தில், 'அச்சு காகிதங்கள் மீதான சுங்க வரியை நீக்க வேண்டும்; நாளிதழ்களுக்கு அரசுகளிடமிருந்து, வர வேண்டிய விளம்பர கட்டண பாக்கிகளை உடனுக்குடன் கொடுக்க உத்தரவிட வேண்டும்; அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை, 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்' என, கோரி இருந்தனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, பரிந்துரை செய்ய வேண்டும் என்றனர். பத்திரிகை உரிமையாளர்களின் கோரிக்கைகள், முழுக்க முழுக்க நியாயமானவை. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரதமருக்கு ஒரு கடிதத்தை, மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்தேன். இவ்வாறு, வைகோ கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE