சேலைக்கு நூலில்லை! இரு மாதங்களாக நெசவாளர்கள் தவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலைக்கு நூலில்லை! இரு மாதங்களாக நெசவாளர்கள் தவிப்பு

Added : மே 19, 2020
Share

பொள்ளாச்சி:ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியிலுள்ள கைத்தறி நெசவாளர்கள், சேலை நெசவுக்கு நுால் கிடைக்குமா என, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், வேலையிழந்துள்ள நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுமென, வலியுறுத்துகின்றனர்.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை, தாலுகாவில், கைத்தறி நெசவுத்தொழிலில், 3,500 குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும், அதிகாலை முதல், நள்ளிரவு வரை நெசவில் ஈடுபட்டு, இரண்டு நாட்களில் ஒரு சேலை நெசவு செய்கின்றனர். நெசவாளர்களுக்கு கைத்தறி சேலை மற்றும் பட்டு நெசவுக்கு, 600 - 1,200 ரூபாய் வரை கூலி பெறுகின்றனர்.வீடுகளில் தறிகளை அமைத்து, நெசவில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, தனியார் நிறுவனங்களும், கூட்டுறவு நெசவாளர் சங்கங்களும் நுால் வழங்குகிறது.கடந்த இரண்டு மாதங்களாக, கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், நுாலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, நெசவுத்தொழில் முடங்கியுள்ளது.நெசவுக்கான நுால் கோவையில் உள்ள தேசிய கைத்தறி நுால் உற்பத்தி மையத்தில் இருந்து, கூடடுறவு சங்கங்கள் மூலம் பெறப்பட்டு, நெசவாளர்களுக்கு வினியோகிக்கப்படுகின்றன.அதேபோல, நெசவு செய்த சேலைகள் தேசிய கைத்தறி சேலைகள் கொள்முதல் மையத்தில் ஒப்படைக்கப்பட்டு, அதற்கான தொகை கூலியாக வழங்கப்படுகிறது.தற்போதைய ஊரடங்கால் வேலையிழந்த நெசவாளர் குடும்பங்கள் வறுமையில் தவிக்கின்றனர்.
மூடப்பட்ட தேசிய கைத்தறி நுால் உற்பத்தி மையம், நுால் வினியோகம் துவங்குமா அல்லது ஊரடங்கு முடியும் வரை கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் காத்திருக்க வேண்டுமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.இந்நிலையில், காட்டம்பட்டியில் உள்ள அண்ணா கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சங்கத்தின் மூலம், உறுப்பினர்களாக உள்ள, காட்டம்பட்டி, எஸ்.அய்யம்பாளையம், செஞ்சேரிபுத்துார், தாசநாயக்கன்பாளையம், அக்கநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நெசவாளர் குடும்பங்களுக்கு, அரிசி உள்ளிட்ட உணவு பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், வேலையிழந்துள்ள நெசவாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். கைத்தறி நெசவுக்கு நுால் கிடைக்காவிட்டாலும், நெசவு செய்த சேலைகள் கொள்முதல் செய்யாவிட்டாலும், நெசவாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால், கைத்தறி நெசவுத்தொழிலை மட்டுமே நம்பியுள்ளவர்களுக்கு, நிலைமை சீராகும் வரை, அரசு நிவாரணமாக, மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கம் மூலம் அனைத்து கிராமங்களிலும், நெசவாளர்கள் துயர் துடைக்க நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும், என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X