படிக்கும் ஆர்வத்தைப் பரவ விடுங்க! கல்வியாளர்கள் அறிவுறுத்தல்| Dinamalar

தமிழ்நாடு

படிக்கும் ஆர்வத்தைப் பரவ விடுங்க! கல்வியாளர்கள் அறிவுறுத்தல்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020
Share
படிக்கும் ஆர்வத்தைப் பரவ விடுங்க! கல்வியாளர்கள் அறிவுறுத்தல்

திருப்பூர்:படிக்கும் ஆர்வத்தை, வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்குத் துாண்ட வேண்டும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், 50 நாட்களுக்கும் மேலாக, சிறுவர், சிறுமிகள், வீட்டிலேயே முடங்கி யுள்ளனர். தெருக்களில், விளையாட முடியாததால், சிறுவர், சிறுமிகள் பலர், மொபைல் போனுக்கு அடிமையாகும் நிலை உள்ளது. தாங்கள் படித்ததை மறக்கும் சூழல் உள்ளது.
கல்வியாளர்கள் கூறியதாவது:அனைத்து மாணவர்களிடமும், ஞாபகசக்தி, ஒரே மாதிரி இருக்காது. அதேசமயம், அவர்களுக்குப் படிக்க அழுத்தம் கொடுக்கக்கூடாது. அவர்களது மனநிலைக்கேற்ப, படிப்பின் மீதான ஆர்வத்தை ஊட்ட வேண்டும். இதன் மூலம், அவர்களது ஞாபகசக்தி அதிகரிக்கும்.மாணவர்களுக்குப் படிக்கும் பழக்கத்தைத் துாண்ட செய்தித்தாள்கள், நல்ல புத்தகங்கள், பயன்படும்.
கடினமான நடையாக இல்லாமல், எளிமையான நடையில் இருந்தால், மாணவர்கள் எளிதாக வாசிப்பர். இதன் மூலம், பல்வேறு புதிய கருத்துகளை அறிந்துகொள்வதோடு, சிந்திக்கும் ஆற்றலும் பெருகும்.திருக்குறள், பாரதியார் கவிதைகள், திருவாசகம் போன்றவற்றை மனனம் செய்ய வைக்கலாம்.
குறிப்பாக, ஆத்திச்சூடி போன்றவற்றை, மேம்போக்காக இல்லாமல், கருத்துகளைப் பதியும்படி படிக்க வைத்தால், தாங்களாகவே, வாசிப்புத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அவர்களிடம் ஊட்ட முடியும். அவர்களாகவே இஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்பது முக்கியம். பொது அறிவு சார்ந்த விஷயங்களையும் படிக்கலாம்.
இதேபோல், எழுத வைத்தும் பழக்க வேண்டும். தினமும் ஒரு பக்க அளவுக்காவது எழுத்துப்பயிற்சி அவசியம். எழுத்துகளை அழகாகவும், தெளிவாகவும் எழுத வைப்பதற்கான கால அவகாசமும் தற்போது கிடைத்துள்ளது.
மொபைல் போனில் இணையத்தேடல் மூலம் நல்ல கருத்துகளைப் பார்க்கத் துாண்டலாம். ஆனால், பெற்றோர் இல்லாத நேரத்தில், வீடியோகேம்ஸ் மற்றும் தவறான தளங்களைச் சென்று பார்ப்பதைக் கண்காணிக்க முடியாது.எனவே, மொபைல் போன் வழங்காமல் தவிர்ப்பது நலம். அப்படியே வழங்கினாலும்,பெற்றோர் கண்காணிப்பு தேவை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X