சென்னை : சூப்பர் புயல், 'அம்பான்' இன்று கரையை கடக்கிறது. அதனால், நாளை முதல் வானிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
உள்ளது.இது குறித்து, அந்த மையம் கூறியுள்ளதாவது:சூப்பர் புயல் அம்பான், சற்று வலு குறைந்து, மிக தீவிர புயலாக, வங்கக் கடலில் சுழல்கிறது.
தடை விதிப்பு

இது, நேற்று இரவில், கோல்கட்டாவுக்கு தென் கிழக்கே, 400 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது. இன்று மாலை அல்லது இரவில், மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும்.புயல் காரணமாக, வங்கக் கடலில் அலைகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. அந்தமான் நிகோபார் முதல், வங்கதேசம் வரையில், வங்கக் கடலுக்குள் மீனவர்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் உள்ளிட்டவை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.புயல் கரையை கடந்ததும், கடல் தட்ப வெப்பநிலை மற்றும் நிலப் பகுதிகளில் நிலவும் அசாதாரண வானிலை, நாளை முதல் படிப்படியாக சீராகும். புயலால் ஏற்பட்ட மறைமுக பாதிப்பால், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு, வங்கக் கடலின் தென் பகுதி மற்றும் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று
வீசும்.
மிதமான மழை
அதனால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம்.கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். ஆனால், 38 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில்
பதிவாகும்.வறண்ட வானிலையுடன் வெப்பக் காற்று வீசும். மற்ற இடங்களில், 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும்.இவ்வாறு, வானிலை ஆய்வு மையம்
கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE