டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றும் அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

டில்லியில், தமிழக அரசின் அடையாளமாக, தமிழ்நாடு இல்லம் இருக்கிறது. நாட்டில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தவுடனேயே, இங்குள்ள அறைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு, உணவகங்கள் மூடப்பட்டன. ஆனாலும், தமிழக அரசு ஊழியர்கள் பலர், கொரோனா பீதிக்கு மத்தியிலும், பணியில் இருந்தனர்.சுற்றுலா, தேர்வுகள் மற்றும் பணிநிமித்தம் காரணமாக, டில்லியிலும், பல்வேறு மாநிலங்களிலும் சிக்கித் தவித்த தமிழர்களை, அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி மீட்கும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு இல்லம் தான் ஒருங்கிணைத்தது.

இந்நிலையில், 16ம் தேதி, சிறப்பு ரயில் ஒன்றில், தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றும் ஒரு அலுவலர், திருச்சிக்கு சென்றார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது, கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு இல்ல ஊழியர்கள் அனைவரும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டது. இதனால், சக அலுவலர்கள் பதற்றத்தில் உள்ளனர். இவர்களின் குடியிருப்பு, தமிழ்நாடு இல்லத்தை ஒட்டியே அமைந்துள்ளதால், அவர்களின் குடும்பத்தினர் மத்தியிலும் பதற்றம் காணப்படுகிறது.
டில்லி நிருபர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE