விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரியும் 50 சதவீத அலுவலர்கள் பணிக்கு வந்து செல்ல, தினசரி பயணச்சீட்டு அடிப்படையில் அரசு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், அரசு அலுவலகங்கள் கடந்த 18ம் தேதி முதல், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், அரசு பணியாளர்கள் அலுவலகம் செல்வதற்கு தனியாக பஸ் வசதி செய்து தரப்படும் எனவும் உத்தரவிடப்பட்டது.இதனால், விழுப்புரம் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு, பணியாளர்கள் பயணச் சீட்டு அடிப்படையில் வந்து செல்ல அரசு பஸ்கள் இயக்க போக்குவரத்துக் கழகத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை பரிந்துரை செய்துள்ளார்.இந்த பஸ்கள் தினந்தோறும் காலை 8:30 மணியளவில் புறப்பட்டு, விழுப்புரம், முண்டியம்பாக்கம், சத்தியமங்கலம், திண்டிவனம் பகுதிகளுக்கு வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, கடலுாரில் இருந்து மாளிகைமேடு வழியாகவும், புதுச்சேரியில் இருந்து வளவனுார் வழியாகவும், திருக்கோவிலுாரில் இருந்து காணை வழியாகவும், திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி வழியாகவும், திண்டிவனத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாகவும், உளுந்துார்பேட்டையில் இருந்து அரசூர் வழியாகவும், வடலுாரில் இருந்து பண்ருட்டி வழியாகவும், கடலுாரில் இருந்து பண்ருட்டி வழியாகவும் விழுப்புரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.இதேபோன்று, புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக முண்டியம்பாக்கத்திற்கும், புதுச்சேரியில் இருந்து செஞ்சி வழியாக சத்தியமங்கலத்திற்கும், விழுப்புரத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக திண்டிவனத்திற்கும், விழுப்புரத்தில் இருந்து முண்டியம்பாக்கத்திற்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் முக கவசம், கையுறை அணிந்து, பஸ்களை இயக்க வேண்டும். இந்த பஸ்களில் அரசு ஊழியர்கள் மட்டுமே வர வேண்டும். குடும்ப உறுப்பினர்களை சொந்த காரணங்களுக்காக அழைத்துவரக் கூடாது. 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் இருவரும், இருவர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவர் மட்டுமே சமூக இடைவெளியுடன் அமர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு ஊழியர்களுக்காக ஏற்கனவே ஒரு சில வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கலெக்டர் பரிந்துரையின் பேரில் கூடுதல் வழித்தடங்களில் இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE