கொரோனாவை எதிர்கொள்ள ரூ.100 கோடி தேவை; சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்| Dinamalar

இந்தியா

கொரோனாவை எதிர்கொள்ள ரூ.100 கோடி தேவை; சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

Added : மே 20, 2020
Share

புதுச்சேரி;'கொரோனாவை எதிர்கொள்வதற்காக சுகாதாரத் துறைக்கு ரூ.100 கோடி தேவையாக உள்ளது' என, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.அவர் அளித்த பேட்டி:கொரோனாவை எதிர்கொள்வதற்கு எதிர்காலத்தில் நிறைய மருத்துவ உபகரணங்களும், மருந்துகளும் தேவைப்படுகிறது. சுகாதாரத் துறைக்கு எவ்வளவு தொகை தேவை என்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.மற்ற மாநிலங்களில் மொத்த பட்ஜெட்டில் 3ல் இருந்து 5 சதவீதம் அளவிற்கு சுகாதாரத் துறைக்கு உயர்த்தி அளிக்கப்படுகிறது. சுகாதாரத் துறைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையில் 50 சதவீதம் அளவிற்கு அதிக தொகை தரப்படுகிறது.புதுச்சேரியை பொருத்தவரை குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதலாக தேவைப்படுகிறது. கொரோனாவிற்காக மருத்துவமனைகளில் அடிப்படையான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும், மருந்து, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும், டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களை கூடுதலாக பணியமர்த்தவும் தொகை தேவைப்படுகிறது.கடந்தாண்டு சுகாதாரத் துறைக்கு 995 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று கேட்டேன். ஆனால், 774 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் 1,030 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.கொரோனாவிற்கு எதிரான போரில் டாக்டர்கள், செவிலியர்கள், ஏ.என்.எம்., ஆஷா ஊழியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு ஊழியர்களும் சிறப்பாக பணியாற்றுகின்றனர். கடந்த 2 மாதங்களாக சுகாதாரத் துறையினரின் பணி திருப்தியளிப்பதாக உள்ளது.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.சுகாதாரத் துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டே, இயக்குனர் மோகன்குமார், இந்தியமுறை மருத்துவ இயக்குனரகத்தின் இயக்குனர் ஸ்ரீராமுலு, நோடல் அதிகாரி ரமேஷ் உடனிருந்தனர்.தொடர்ந்து, சுகாதாரத் துறைக்கு கூடுதல் தொகை ஒதுக்குவது தொடர்பாக, முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X