செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 538 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 199 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று, பல்லாவரம், தாம்பரம் - தலா ஆறு; செங்கல்பட்டு - ஐந்து; திருக்கழுக்குன்றம் - நான்கு; செய்யூர் - ஒன்று என, 22 பேர், வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதில், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த, மாமல்லபுரம் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது, நேற்று கண்டறியப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, வீடு சென்ற அவரை, செங்கல்பட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று சேர்த்தனர்.தொடர்ந்து, மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தார். மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைவரையும், இன்று பரிசோதிக்க அறிவுறுத்தினார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவேற்காடு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில், எட்டு பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை, 571 ஆக உயர்ந்தது. இதில், 185 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஆறு பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது, 380 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட அளவில், நேற்று முன்தினம் வரை, 203 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று, புதிதாக ஐந்து பேருக்கு, வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. குன்றத்துார் தாலுகா, திருமுடிவாக்கத்தில் ஒருவர்; காஞ்சிபுரத்தில் - நான்கு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 208 ஆக உயர்ந்துள்ளது.
- நமது நிருபர் குழு -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE