புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு எப்போது?| Dinamalar

இந்தியா

புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு எப்போது?

Added : மே 20, 2020
Share

புதுச்சேரி;மதுக்கடை விவகாரத்தில் காலையில் ஆரம்பித்த 'சஸ்பென்ஸ்', நள்ளிரவு வரை நீடித்தது.புதுச்சேரியில் மதுக் கடைகளை திறப்பது தொடர்பாக விவாதிப்பதற்காக, அமைச்சரவை நேற்று முன்தினம் கூடியது. செவ்வாய் கிழமையன்று (நேற்று) மதுக்கடைகளை மீண்டும் திறப்பது என அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் மதியம் அறிவித்தார்.தொடர்ந்து, இரவு 10:30 மணியளவில் மீண்டும் பேட்டியளித்த முதல்வர், அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னரின் ஒப்புதலை பெற வேண்டி உள்ளதாகவும், மதுவின் மீது கொரோனா வரி விதிக்க முடிவு செய்துள்ளதாகவும், புதன் கிழமையன்று (இன்று) மதுக் கடைகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இந்நிலையில், சட்டசபை வளாகம் நேற்று காலை யில் இருந்தே பரபரப்பாக காட்சியளித்தது. முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டங்கள் காலையிலும் நடந்தது; மாலையிலும் தொடர்ந்தது. ஆனால், விவாதிக்கப்பட்டது என்ன, எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.மதுக்கடை திறப்பு, கொரோனா வரி விதிப்பு தொடர்பான கோப்பு அனுப்பப்பட்டுள்ளதா என ராஜ்நிவாசை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'எந்த கோப்பும் வரவில்லை' என மாலையில் தெரிவிக்கப்பட்டது. பின், இரவு 9:00 மணியளவில் கோப்பு ராஜ்நிவாசுக்கு வந்துள்ள தகவல் வெளியானது.இதற்கிடையில், கவர்னர் கிரண்பேடி இரவு உணவிற்காக அலுவலகத்தில் இருந்து மாடியில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று விட்டதாகவும், மதுக்கடைகள் தொடர்பான கோப்பை இன்று காலையில்தான் பார்த்து ஒப்புதல் தருவார் என கூறப்பட்டது.கோப்பை கவர்னர் பார்த்துக் கொண்டுள்ளார் என்றும் பிறகு தகவல் வெளியானது. ஆனால், நள்ளிரவு வரை எந்த அறிவிப்பும், உத்தரவும் வெளியாகவில்லை. இதனால், மதுக்கடைகள் விஷயத்தில் காலையில் ஆரம்பித்த 'சஸ்பென்ஸ்' நள்ளிரவு வரை நீடித்தது.கவர்னர் ஒப்புதல் அளித்து முறைப்படியான அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகே, புதுச்சேரியில் இன்று அல்லது நாளை மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் என தெரிகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X