மாமல்லபுரம் : அமைப்பு சாரா தொழிலாளர்களிடம், நல வாரிய நிவாரண நிதி பெற்றுத் தருவதாக கூறி, சிலர் பணம் வசூலிப்பதாக, புகார் எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு, அரசு, தலா, 1,000 ரூபாய் வழங்கியது. வாரிய உறுப்பினர் அல்லாதோர், இந்நிவாரணம் பெற இயலவில்லை.இந்நிலையில், வெளியூர் நபர்கள் சிலர், மாமல்லபுரம் பகுதியில், சில நாட்களாக முகாமிட்டு, நலவாரிய நிதி பெற்றுத் தருவதாக, தொழிலாளர்களை அணுகுகின்றனர்.தலா, 400 - 500 ரூபாய் அளித்தால், வாரிய உறுப்பினராக சேர்த்து, வங்கி கணக்கில், 2,000 ரூபாய் வரவு வைப்பதாக கூறி, பணம் வசூலிக்கின்றனர்.
குறைந்த பணத்தை கொடுத்தால், அதிக தொகை கிடைப்பதாக கருதி, பொதுமக்களும், விண்ணப்ப படிவ நகலில் பெயர், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை நிரப்பி, பணம் அளிக்கின்றனர்.தொழிலாளர் அல்லாத இல்லத்தரசிகளிடமும், விண்ணப்பம் பெற்று, பணம் வசூலிக்கின்றனர். பல பகுதிகளில், இவ்வாறு வசூல் நடப்பதாக கூறப்படுகிறது.ஊரடங்கு முடக்க பாதிப்பை சாதகமாக்கி, மக்களிடம், நிவாரண நிதி ஆசையை துாண்டி, பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுத் துறையினர், இந்த மோசடியை தடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE