செங்குன்றம் : வட மாநில தொழிலாளர்களை, வெயிலில் காக்க வைத்து, உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சொந்த ஊர்
சென்னையின் சுற்று வட்டாரங்களில் இருந்து, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று மாலை, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல, பொன்னேரி தாலுகா, வருவாய் பேரிடர் மேலாண்மை நிர்வாகம் ஏற்பாடு செய்தது.அவர்கள், செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு உடல் வெப்ப மருத்துவ பரிசோதனை நடந்தது.
அதற்காக, அனைவரும், காலை, 8:00 மணி முதல், வெயிலில் காத்திருந்தனர்; 10:30 மணிக்கு காலை உணவு வழங்கப்பட்டது. வெயிலில் காத்திருந்து, உடல் வெப்ப பரிசோதனை செய்தவர்களுக்கு, வெப்பத்தின் அளவு கூடுதலாகவே இருந்தது.மேலும், வெயிலில் காத்திருந்ததால், பலரும் சோர்வடைந்தனர். அதை கண்ட சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினரிடம் முறையிட்டனர். இதையடுத்து, 11:00 மணி அளவில், அவர்களை, அங்குள்ள மரம் மற்றும் வகுப்பறை நிழலில் அமர வைத்தனர்.
நடவடிக்கை
அதன் பிறகு, பரிசோதனை தொடர்ந்தது. வட மாநில தொழிலாளர்களை வெயிலில் காக்க வைப்பது, தாமதமாக உணவு வழங்குவது போன்ற அலட்சியத்தை தவிர்க்க, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE