சென்னை: பழங்களை நுகர்ந்து பார்த்து வாங்குவதற்கு, மாதவரம் புறநகர் பஸ் நிலைய கடை வியாபாரிகள் தடை விதித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, சென்னை, மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில், தற்காலிக பழ மார்க்கெட் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் பலவகை பழங்கள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகின்றன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட சிறு வியாபாரிகள், இங்கு வந்து பழங்களை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். தற்போது, இந்த மார்க்கெட்டிற்கு, பொதுமக்களும் வந்து செல்கின்றனர். சமூக விலகலை கடைப்பிடிக்காமல், மார்க்கெட்டில் விற்பனை நடந்து வருகிறது.
இதனால், இங்குள்ள பல வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள், பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மார்க்கெட்டிற்கு வரும் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், மா, வாழை, பலா, சப்போட்டா உள்ளிட்ட பழங்களை நுகர்ந்து பார்த்து வாங்குகின்றனர். இதனால், உஷார் அடைந்துள்ள மற்ற வியாபாரிகள், வாய் மற்றும் மூக்கு வழியாக கொரோனா பரவுவதால், பழங்களை நுகர்ந்து பார்த்து வாங்குவதற்கு தடை விதித்துள்ளனர்.
பழங்களை கையால் தொடவும், சில கடைகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடை ஊழியர்களை, அவற்றை எடை போட்டு சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கைகளில் கொடுக்க துவங்கிஉள்ளனர். இதேபோன்று, சமூக விலகலையும் முறையாக கடைப்பிடித்தால், இங்கு கொரோனா பாதிப்பு குறையும் வாய்ப்புள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE