தாளவாடி அருகே, விதி மீறிய சலூன் கடைக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர். கடை திறந்த முதல் நாளிலேயே நடந்ததால், மற்ற கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா நான்காம் கட்ட ஊரடங்கில், பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் ஒரு பகுதியாக, கிராமப்புறங்களில் உள்ள சலூன் கடைகளை, மே, 20ம் தேதி முதல் திறந்து கொள்ளலாம். அதே சமயம் கடை ஊழியர், வாடிக்கையாளர், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், கிராமப்புறங்களில் நேற்று சலூன் கடைகள் திறக்கப்பட்டன. தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில், தாசில்தார் ஜெகதீசன் மற்றும் போலீசார், நேற்று ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, மணி என்பவரின், கஜா மென்ஸ் பார்லர் சலூன் கடை, சமூக விலகலை கடைப்பிடிக்காமல், முகக்கவசம், கையுறை அணியாமல் விதிகளை பின்பற்றாமல் இயங்கியது தெரிந்தது. இதனால், கொரோனா பரவும் ஆபத்து உள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், சலூன் கடையை பூட்டி, சீல் வைத்தனர்.
கலெக்டர் திடீர் ஆய்வு: மொடக்குறிச்சி, லக்காபுரம் பகுதியில், விசைத்தறி கூடங்களில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர் கதிரவன், நேற்று ஆய்வு செய்து அறிவுறுத்தினார். இதையடுத்து லக்காபுரத்தில், ஒரு முடி திருத்தும் கடையில் ஆய்வு செய்தார். அப்போது கடை உரிமையாளர் முகக்கவசம் அணியாமல் பணியில் ஈடுபட்டிருந்தார். கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கும்படி பஞ்., அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஈரோடு, மூலப்பாளையத்தில், ஒரு துணிக்கடையில் ஊழியர்கள், முகக்கவசம் அணியாததால், கடையை மூட கலெக்டர் உத்தரவிட்டார். இதேபோல் விதிகளை பின்பற்றாததால், பவானி, அந்தியூர், சித்தோடு, ஆப்பக்கூடல் மற்றும் வெள்ளித்திருப்பூர் பகுதிகளில் தலா ஒரு கடை என, ஐந்து சலூன் கடைகள் மீது, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மொத்தத்தில் ஈரோடு மாவட்டத்தில், 16 சலூன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் சப்-டிவிஷனில் மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
- நிருபர்கள் குழு -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE