ஊரடங்கால் ரூ.500 கோடி பட்டு சேலைகள் தேக்கம்: தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கால் ரூ.500 கோடி பட்டு சேலைகள் தேக்கம்: தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

Added : மே 20, 2020
Share

சேலம்: ''ஊரடங்கு உத்தரவால், சேலம், நாமக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 500 கோடி ரூபாய், பட்டு சேலைகள் முடங்கி உள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும்,'' என, சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பலராமன் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி, கொண்டலாம்பட்டி, புத்தூர், பஞ்சுகாளிப்பட்டி, மேச்சேரி, ஓமலூர், சிந்தாமணியூர், செம்மாளப்பட்டி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை, அரூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் கைத்தறி பட்டு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சீனாவில் கொரோனா நோயின் தாக்கம் காரணமாக, ஜனவரி மாதம் முதல், அங்கிருந்து விற்பனைக்கு வரும் நூலின் வரத்து நின்றதால், இந்த தொழில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து மீளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,


இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில், மார்ச், 24ல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கால் சேலம் உட்பட தமிழகம் முழுவதும், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கைத்தறி பட்டு சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன. சேலம் உட்பட தமிழகம் முழுவதும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டு தறிக் கூடங்கள் மூடப்பட்டதால், 1.50 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்; சாப்பாட்டுக்கே வழியின்றி தவிக்கின்றனர். எனவே, கைத்தறி பட்டு தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அது மட்டுமின்றி, தேங்கியுள்ள பட்டு சேலைகளை விற்பனை செய்து, தொழிலை காக்கும் வகையில், காஞ்சிபுரம், மதுரை, சேலத்தில் மூடப்பட்டுள்ள கைத்தறி பட்டு விற்பனை கூடங்களை திறந்து செயல்பட அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X