புதுடில்லி: உலகின் மிகப்பெரிய அரசு சுகாதார காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 1 கோடி பேர் பயனடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள சுமார் 10 கோடி ஏழை குடும்பங்கள் மருத்துவக்காப்பீடு பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு செப்., மாதம் பிரதமர் மோடி இத்திட்டத்தை செயல்படுத்தினார். உலகின் மிகப்பெரிய அரசு சுகாதார காப்பீடு திட்டமான இதன்மூலம் ஏழை குடும்பங்கள், தரமான சிகிச்சையை இலவசமாக பெற முடியும். அதாவது, 50 கோடி மக்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தபடுகிறது.

இத்திட்டம் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த முயற்சி பல உயிர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன். அவர்களின் நல்ல ஆரோக்கியத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். எங்கள் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் உடன் தொடர்புடைய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அவர்களின் முயற்சிகளால் இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாக மாறியுள்ளது.

இந்த முயற்சி பல இந்தியர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது, குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிந்தவர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. ஆயுஷ்மான் பாரத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று பெயர்வுத்திறன். பயனாளிகள் தாங்கள் பதிவுசெய்த இடத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உயர்தர மற்றும் மலிவான மருத்துவ சேவையைப் பெற முடியும். வீட்டிலிருந்து விலகி வேலை செய்பவர்களுக்கு அல்லது அவர்கள் சொந்தமில்லாத இடத்தில் பதிவு செய்தவர்களுக்கு இது உதவுகிறது. எனது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணங்களின் போது, நான் ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுடன் உரையாடுவேன். துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்களில் அது சாத்தியமில்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.