அவர்களும் இந்நாட்டு குடிமக்களே!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அவர்களும் இந்நாட்டு குடிமக்களே!

Added : மே 20, 2020
Share

அவர்களும் இந்நாட்டு குடிமக்களே!

என்.ஆசைத்தம்பி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொருளாதார மறுகட்டமைப்புக்காக, பிரதமர் மோடி அறிவித்துள்ள, 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.'சுய சார்பு இந்தியா என்ற நோக்குடன், திட்டங்கள் முன்னெடுக்கப்படும்' என, பிரதமர் கூறியது, பெரும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும்
ஏற்படுத்தியது.ஆனால், அதை தொடர்ந்து வெளியான, நிதியமைச்சரின் விரிவான அறிக்கைகளை அலசி ஆராய்ந்துப் பார்க்கும்போது, பெரும் முதலாளிகள் மற்றும் 'கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கே, மத்திய அரசின் திட்டங்கள் பலனளிக்கும் என்றே தோன்றுகிறது. கார்ப்பரேட் கம்பெனி, உள்நாட்டு உற்பத்தியில் முதலீடு செய்யும் நிறுவனம், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றின் ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் முக்கியமானது. அதற்கு, அரசின் உதவிகளும், ஒத்துழைப்பும் அத்தியாவசியமானதே.அதே நேரத்தில், 20 லட்சம் கோடிக்கு, எத்தனை பூஜ்ஜியம் என்று கூட தெரியாத, சாமானிய அடித்தட்டு மக்களுக்கும், பலன் கிடைக்க வேண்டும்.தொலைநோக்குப் பார்வையோடு, திட்டங்கள் தீட்டியுள்ள மத்திய அரசு, நடுத்தர வர்க்க மக்களைப் பற்றி சிந்திக்கவே இல்லையோ என, நினைக்கத் தோன்றுகிறது.தனியார் நிறுவனங்களில், குறைந்த சம்பளத்தில் பணி புரிவோர், ஓட்டுனர்கள், சுய தொழில் மூலம் சொற்ப வருமானம் ஈட்டுவோர், சிறு தொழில்கள் செய்வோர் என பலரும், அன்றாட வருமானத்தை நம்பியே, வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றனர்.கடை மற்றும் வீட்டு வாடகை, வாகன கடன் தவணை, மின் கட்டணம், மருத்துவம், பராமரிப்பு என, இவர்கள் மாதம்தோறும் சந்திக்கும் தவிர்க்க முடியாத செலவுகள் நிறைய உண்டு.ஊரடங்கால், கடந்த, மூன்று மாதங்களுக்கு, அவர்களுக்கு வருவாய் கிடைக்கவில்லை; தவிர்க்க முடியாத செலவுகளை, சந்தித்தே ஆக வேண்டும். அவர்கள் எந்த வருமானமும் இல்லாமல், கையில் இருந்த சேமிப்பை பயன்படுத்தியோ, கடன் வாங்கியோ, இதுவரை
சமாளித்துள்ளனர். இவர்களின் வாழ்க்கைத்தரம் மீண்டும் பழைய நிலையை அடைவது, மிகுந்த சிரமம்; நீண்ட காலம் ஆகலாம். மத்திய வர்க்கத்தினர், என்ன பாவம் செய்தார்களோ... எந்த அரசு திட்டங்களும், அவர்களுக்கு எட்டுவதே இல்லை.
மத்திய அரசு, இந்த நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏதாவது செய்ய வேண்டும்... ஏனெனில், அவர்களும் இந்நாட்டு குடிமக்களே!

நம்பிக்கையோடுஇருப்போம்!

செ.அந்தோணிதாஸ்,சென்னையிலிருந்து எழுதுகிறார்:மருத்துவர், செவிலியர், காவலர், சுகாதார துறையினர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்டோர், இரவு - பகல் பாராது, கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றி, பாரங்களை சுமந்து, சிலுவைப் போரை நினைவுப்படுத்துகின்றனர். தங்களையே மெழுகாக உருக்கிக்கொண்டு, மக்களுக்காக போராடுகின்றனர்.இன்றைய நிலையில், கொரோனாவிற்கு, சத்தான ஆகாரங்கள் தான் தீர்வு. அது, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால் ஏழை, எளிய மக்கள், உணவுக்காக போராடிக்கொண்டிருக்கையில், சத்துக்களுக்கு எங்கே போவது?விழித்திருக்கிறோம், வீட்டிலிருக்கிறோம் ஆனால், எப்படி மகிழ்ந்திருப்பது? 50 நாட்களுக்கு மேலாக, வேலையின்றி இருக்கும் தொழிலாளர்கள், தங்களின் பசியை போக்க முடியாமல், கண்ணீர் வடிக்கின்றனர்.வாடகை கேட்டு, வீட்டு உரிமையாளர் கதவைத் தட்டுகிறார். நிதி நிறுவனங்கள், தவணை செலுத்தாததால், அபராதம் போடுகின்றன. மளிகையும், காய்கறியும் வாங்கித் தானே ஆக வேண்டும். வருவாய் இல்லாமல், இதை எப்படி சமாளிப்பது?'டாஸ்மாக்' மதுக் கடைகள் மூடியிருந்த வரை, குடும்பங்களில் பிரச்னை தலை துாக்கவில்லை. இப்போது, 'குடி'மகன்கள் தள்ளாட துவங்கிவிட்டனர். ஊரடங்கால், மக்கள் துயரங்களை அனுபவிக்கின்றனர். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் செய்வதறியாமல் திணறி வருகின்றனர். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க, மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.இது, நம் அனைவரும், சோதனைக் காலம். அதனால், வைரசுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என, அரசு கூற துவங்கிவிட்டது.அனைத்திற்குள் ஒரு முடிவு உண்டு. இந்த கொரோனாவிற்கு முடிவு உண்டு; எனவே, நம்பிக்கையோடு இருப்போம்!

கடவுள் காப்பாற்றுவார்!

எம்.கே.பார்த்தசாரதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: சீனாவில், எங்கோ ஒரு மூலையில் பிறந்து, காற்றில் பரவிய, கொரோனா வைரஸ், இன்று உலகத்தையே புரட்டிப் போட்டுள்ளது.மக்களை, அவர்களின் வீட்டுக்குள்ளேயே முடக்கியுள்ளது. ஏழைகளின் வாழ்வாதாரங்களையே கேள்விக்குறியாக்கி உள்ளது. தொழில், விவசாயம் என, அனைத்தும் ஸ்தம்பித்து உள்ளன.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், அனைத்து அரசு துறைகளும், வழக்கமான பணியை மேற்கொள்ள முடியாமல் உள்ளன.கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில், தொய்வு ஏற்படக் கூடாது; ஏனெனில் இன்னமும், கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.பொருளாதார மீட்பு நடவடிக்கையில், மத்திய அரசு இறங்கியுள்ளது, பாராட்டத்தக்கது. நலத் திட்டங்கள், கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதில், மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும்.
அறிவியல் மட்டுமின்றி, ஆன்மிக வழியாகவும், நோய் தொற்றை குணப்படுத்த முடியும்.திருஞான சம்பந்தர் அருளிய, கோளாறு பதிகமும்; நம்பூதிரி பாடிய, நாராயணீயம் சுலோகங்களையும், மக்கள் படிக்க வேண்டும்.ஓதுவார்கள், இந்த பதிகத்தை, கோவில்களில் பாட வேண்டும். அவை, கவசமாக செயல்பட்டு, மக்களை காக்கும்.கோவில்களில், சுவாமிக்கு அபிஷேகம் செய்து, மக்களுக்கு பிரசாதம் வினியோகித்தால், அந்த தெய்வங்கள், நம்மை காக்கும். அரசு, இதற்கு நிதியளிக்க வேண்டும்.
முதல்வராக, ஜெயலலிதா இருந்தபோது, மழை பெய்ய வேண்டும் என, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்ததையும்; அதனால், மழை பெய்து, தண்ணீர் பிரச்னை தீர்ந்ததையும், நாம் மறந்துவிடக் கூடாது.இறைவன், நம் அனைவரையும் காப்பாற்றுவார்; நம்புங்கள்!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X