கோவை:தென்மேற்கு பருவமழை துவங்க இருப்பதால், நொய்யல் ஆறு வழித் தடத்தில், காளம்பாளையம் பிரிவு மற்றும் பேரூர் படித்துறை அருகே, பாலம் கட்டும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது. செல்வபுரம், எல்.ஐ.சி., காலனிக்குள் தண்ணீர் செல்வதை தடுக்க, சேத்துமா வாய்க்காலில் தடுப்பு சுவர் கட்டப்படுகிறது.
கோவையில், கடந்தாண்டு ஜூன் முதல் ஆக., வரை மழை தட்டியெடுத்தது. நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வினாடிக்கு, 5,000 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.நொய்யல் வழித்தடத்தில், பல்வேறு இடங்களில் இடையூறு ஏற்பட்டது. காளம்பாளையம் பிரிவில், குனியமுத்துார் கிளை வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு, ஆற்றுக்கு தண்ணீர் திரும்பியதால், பேரூர் படித்துறை மூழ்கியது.படித்துறை அருகே வேடபட்டி செல்லும் ரோட்டில், பாலம் கட்டுவதற்கான வேலை துவக்கப்பட்டிருந்தது; அதுவும் மூழ்கியது.சேத்துமா வாய்க்கால் புதர்மண்டி இருந்ததாலும், அடைப்புகள் இருந்ததாலும், செல்வபுரம் எல்.ஐ.சி., காலனி விரிவு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்தாண்டு இப்போதே உஷார்!நடப்பாண்டு, வரும் ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்கும். கடந்தாண்டு போல் பிரச்னை ஏற்படாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகள் உஷாராகி உள்ளனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்படி, காளம்பாளையம் பிரிவில், குனியமுத்துார் கிளை வாய்க்காலில் தண்ணீர் பிரித்து அனுப்பும் இடத்திலும், பேரூர் படித்துறை அருகே, ஆற்றின் குறுக்கேயும் பாலம் கட்டும் பணி, துரிதமாக நடந்து வருகிறது.
வெள்ள தடுப்பு சுவர்!
செல்வபுரம் எல்.ஐ.சி., காலனிக்குள் தண்ணீர் புகாத வகையில், சேத்துமா வாய்க்காலில் ஒரு கி.மீ., துாரத்துக்கு, 3.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாக்கடை கால்வாய் மற்றும் வெள்ள தடுப்பு சுவர் கட்டும் பணியை, மாநகராட்சி துவக்கியிருக்கிறது. பருவ மழை துவங்குவதற்குள் பணிகளை, விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஊரடங்கால், கட்டுமான பணிகள் தடைபட்டன. தென்மேற்கு பருவமழையில், கிடைக்கும் நீரை குளங்களில் தேக்க தயாராக இருக்கிறோம். தங்கு தடையின்றி, குளங்களுக்கு நீரை கொண்டு சேர்ப்போம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE