கல்வராயன் மலையில் குடிசை தொழில் போல் கள்ளச்சாராயம் பெருகியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனை முற்றிலும் ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக அமைந்துள்ள கல்வராயன்மலை இயற்கை எழில் நிறைந்ததாக விளங்குகிறது. இங்கு இயற்கையான நீரோட்டங்களும், மரங்களும் அடர்ந்து வளர்ந்த பள்ளத்தாக்குகளும் நிறைந்துள்ளது.அதேபோல் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான கடுக்காய் மற்றும் சில வகை மரங்களின் பட்டைகளும் இங்கு எளிதாக கிடைக்கிறது. ஒருசில அதிகாரிகளின் மறைமுக ஆதரவு இருப்பதால் கள்ளச்சாராயம் காய்ச்சும் முக்கிய மையமாக கல்வராயன்மலை மாறியுள்ளது.வேலை வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களை தவறான வழியில் ஈடுபடுத்தி சில சமூக விரோத கும்பல் சாராயம் காய்ச்சுவதை முக்கிய தொழிலாக மேற்கொண்டு வருகின்றன. இது தற்போது குடிசை தொழிலாகவும் மாறி வருகிறது. சாராயம் காய்ச்ச தேவையான வெல்லம் உள்ளிட்ட சில பொருட்கள் மலைக்கு தங்கு தடையின்றி எடுத்துச் செல்லப்படுகிறது.அதேபோல் இங்கு காய்ச்சப்படும் சாராயம் வாகனங்கள் மூலமாகவும், தலை சுமையாகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் சாராயம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு டாஸ்மாக் கடை மூடப்பட்ட போது கள்ளச்சாராய விற்பனை மூலம் பணம் கொழிக்கும் வியாபாரமாக மாறியது. மலையில் ஒரு லிட்டர் சாராயம் 300 ரூபாய்க்கும், அடிவார கிராமங்களில் 550 ரூபாய்க்கும், அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு கொண்டு செல்லப்படும்போது 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப் பட்டது.மலையில் காய்ச்சப்படுவதால்
இதற்கு 'மூலிகை சரக்கு' என சிறப்பு பெயர் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தனர். காய்ச்சுவதற்கும், மலையிலிருந்து தலைச்சுமையாக கீழே கொண்டு வருவதற்கும், அதனை மற்ற ஊர்களுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கும், சரக்கை குடிமகன்களிடம் விற்பனை செய்வதற்கும் என ஒரு பெரிய நெட் ஒர்க்கே இதில் இயங்குகிறது.
அதிகாரிகள் எளிதில் செல்ல முடியாத இடத்தில் சாராயம் காய்ச்சப்பட்டாலும்; அதற்கான மூலப் பொருட்கள் சாலை வழியாக செல்வதையும், காய்ச்சிய சாராயத்தை கீழே கொண்டு வருவதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோரின் ஒருங்கிணைந்த கடும் நடவடிக்கையால் மட்டுமே கல்வராயன் மலையில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியும்.இதற்கு உடந்தையாக உள்ள ஒரு சில அதிகாரிகளை, களை எடுத்து அதிரடி நடவடிக்கை மூலம் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-நமது நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE